தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏபிபி நாடுவிற்கு பிரத்யேக பேட்டியளித்தது தொடர்பாகவும், மணிப்பூர் கலவரம் தொடர்பாகவும் பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஏபிபி நாடுவிற்கு அளித்த பேட்டியைப் பார்க்கலாம்.
கேள்வி : இந்தியாவை காப்பாற்ற எதிர்கட்சிகள் ‘இந்தியா’ என்ற கூட்டணியை அமைத்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ள கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில் : ”எதிர்கட்சிகளின் கடந்த கால செயல்பாடுகள், ஒரு சில இடங்களில் அவர்களின் அரசாங்கத்தை வைத்து பார்க்கும் போது, இந்தியா என்பதற்கு பதிலாக ஆண்டி இந்தியா என வைத்திருக்கலாம். அவர்கள் இந்திய ஒற்றுமைக்காகவோ, ஒருமைப்பாட்டிற்காகவோ ஒன்று சேரவில்லை. அவர்களின் அரசியல் வாழ்க்கையை காப்பாற்ற ஒன்று சேர்ந்துள்ளார்கள்”
கேள்வி : எதிர்கட்சிகளின் ஒற்றுமையை பார்த்து பாஜக பயப்படுகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளாரே?
பதில் : ”தமிழக முதல்வருக்கு பயம் வந்திருக்க வேண்டும். ஒன்றன் பின் ஒன்றாக அவர்களின் அமைச்சர்களை மாற்றும் சூழ்நிலைக்கு அவர் போய்க்கொண்டு இருக்கிறார். அதனால் பயப்பட வேண்டியது அவர் தானே தவிர, 9 ஆண்டுகள் நேர்மையாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பிரதமர் மோடியோ, பாஜகவோ அல்ல”
கேள்வி : எதிர்கட்சிகளை முடக்க அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளை பாஜக பயன்படுத்துவதாக முதலமைச்சர் குற்றம்சாட்டியதை எப்படி பார்க்குறீர்கள்?
பதில் : ”எதிர்கட்சிகள் என்ன தவறு செய்தாலும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க எப்போதும் எங்களது அரசு தயாராக இருக்கும். அதனால் நடவடிக்கை எடுப்பதைப் பற்றி பேசுவதை விட, நடவடிக்கை எடுக்கும் சூழல் ஏன் வந்துள்ளது என முதல்வர் யோசித்தால் சரியாக இருக்கும்.”
கேள்வி : பாஜக உடன் கூட்டணியில் இருப்பதால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கவில்லையா?
பதில் : ”முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீடுகளிலும் சோதனை நடந்துள்ளது. அவர்கள் மீதும் நடவடிக்கை இருக்கிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், பாஜக அரசு வேடிக்கை பார்க்காது. ஆதாரம், ஆவணங்கள் அடிப்படையில் தான் நடவடிக்கையே தவிர, அரசியல் கட்சிகளில் இவர்கள் எதிர்கட்சியா, கூட்டணி கட்சியா எனப் பார்த்து நடவடிக்கை எடுப்பதில்லை. தவறு செய்திருந்த பாஜக நிர்வாகிகள் மீது கூட நடவடிக்கை எடுத்து இருக்கிறோம்”
கேள்வி : செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரும் பாஜக குற்றப்பின்னணி கொண்ட தனது அமைச்சர்களை நீக்குமா என கேள்வி முதலமைச்சர் எழுப்பியுள்ளாரே?
பதில் : “பாஜக இரட்டை வேடம் போடவில்லை. அதேசமயம் நீதிமன்ற நடவடிக்கைகள் எதில் எப்படி இருக்கிறது எனப் பார்த்து தான், நடவடிக்கை எடுக்க முடியும். ஒருவர் மீது எப்.ஐ.ஆர். போடுவதால், குற்றவாளியாக இருக்க மாட்டார். பின்னால் இருக்கும் விசாரணையை பார்க்க வேண்டும். ஆராய்ந்து பார்த்து தவறு செய்திருந்தால் அவர்களை அமைச்சர்களாக எங்களது அரசு ஏற்றிருக்காது.
கேள்வி : பாஜக ஆட்சியின் கவுண்டவுன் பெங்களூரில் இருந்து துவங்கி விட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தெரிவித்ததை எப்படி பார்க்குறீர்கள்?
பதில் : “எதிர்கட்சிகளின் வேலை இந்தியா முழுவதும் டூர் போக வேண்டிய வேலை தான். அதனால் ஒவ்வொருவருக்கும் அரசியல் எதிர்காலம் மோடியால் பாழாகிவிடுமோ, இல்லை வாரிசு, ஊழல் அரசியலை மோடி அழித்து விடுவாரோ என ஒன்று சேர்ந்துள்ளவர்கள் ஊர் ஊராக போய்க்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அவர்களின் முயற்சியை தொடரலாம். ஆனால் ஒருபோதும் மக்கள் பிரதமர் மோடியை கைவிட மாட்டார்கள்”
கேள்வி : மணிப்பூர் கலவரம் தொடர்பாக மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்படுகிறதே?
பதில் : ”மத்திய உள்துறை அமைச்சர் நேரடியாக சென்றுள்ளார். ஆளுநர் தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. துணை ராணுவம் தேவைக்கு ஏற்ப அனுப்பப்பட்டு கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி தொடர்ந்து கண்காணித்து வருகிறார். மணிப்பூர் முதல்வர் ரிப்போர்ட் அளித்து வருகிறார். மத்திய அரசு அமைதி திரும்ப தேவையான உதவிகளை செய்து கொண்டிருக்கிறது. மணிப்பூர் பிரச்சனையில் இன்னும் சமுதாயத்தை பிளவுபடுத்தும் சூழலுக்கு கொண்டு போகக்கூடாது என்பதால் பொறுமையாக, அமைதியாக, உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.”
கேள்வி : மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோவை டிவிட்டரில் இருந்து நீக்க மத்திய அரசு அறிவுறுத்துள்ளதை எப்படி பார்க்குறீர்கள்?
பதில் : “அந்த வீடியோவை ஒருமுறைக்கு மேல் நாகரிகம் இருக்கும் எந்த மனிதனும் பார்க்க முடியாது. அந்தளவிற்கு அது கொடுரமான வீடியோ. ஆனால் பொதுவெளியில் அனைவரும் பார்க்கும் வகையில் திரும்ப திரும்ப போடுவது பாதிக்கப்பட்ட பெண்களின் அடிப்படை உரிமைக்கு எதிரானது. குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித்தருவதில் பாஜக அரசு உறுதியாக உள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களின் மனநிலை நினைத்து பார்க்க வேண்டும். அது சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதனடிப்படையில் அரசு எப்போதும் இதுபோன்ற நடவடிக்கை எடுப்பது வழக்கமான ஒன்று தான்.
கேள்வி : மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டுமென நாடாளுமன்றத்தை எதிர்கட்சிகள் முடக்கியுள்ளார்களே?
பதில் : ”நாடாளுமன்ற நடைமுறையின்படி யார் பதிலளிக்க வேண்டுமோ, அவர் பதிலளிப்பார். அதை ஏற்றுக்கொண்டால் விவாதிக்க தயார்”
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/