இந்தியாவில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இரண்டு நாட்களுக்கு முன் அரசு வெளியிட்டது. நாட்டில் அரிசியின் விலை உயர்வை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் அரிசி, பருப்பு, பால், காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக பருப்பு மற்றும் அத்தியாவசிய மளிகை பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த மாதம் பருப்பு வகைகளின் இருப்பு நிலை குறித்து மத்திய அரசு ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. அதுமட்டுமின்றி கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் அரிசியின் விலை 20 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.




இந்த சூழலில் அரிசி ஏற்றுமதிக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வருவதற்கு முன்னரே கப்பல்களில் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தால் அதற்கு அனுமதி உண்டு, மற்ற நாடுகளின் உணவு பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் படி அரசாங்கம் வழங்கிய அனுமதியின் அடிப்படையில் அரிசி ஏற்றுமதி செய்யலாம். மேலும் பிற நாட்டு அரசாங்கத்தின் கோரிக்கையை பொறுத்து பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. பருவமழை தாமதமாக தொடங்கியதன் காரணமாக உற்பத்தி பாதிக்கப்படும் என அஞ்சப்படும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.




உலக அரிசி ஏற்றுமதியில் சுமார் 40 சதவீத பங்கை இந்தியா கொண்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் சுமார் 55.4 மெட்ரிக் டன் அளவு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்றும் இந்தியாவிலிருந்து சுமார் 22.2 மில்லியன் டன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த தடையால் உலக அளவில் அரிசி விலை கடுமையாக உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.






இந்த அறிவிப்பு வெளியான நிலையில் அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் சூப்பர் மார்க்கெட்டிற்கு படையெடுத்துள்ளனர். அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தால் கடைகளில் மக்கள் வரிசைக்கட்டி நிற்கின்றனர். ஒரு சில கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ஒரு சில கடைகளில் ஒரு குடும்பத்திற்கு ஒரு அரிசி மூட்டை மட்டுமே வழங்கப்படும் என்ற நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் செய்வதறியாது இருக்கின்றனர்.