ரஷ்யா – உக்ரைன் போர் உலக நாடுகளை கவலை கொள்ளச் செய்துள்ள அதேசூழலில், தற்போது நடைபெற்று வரும் இஸரேல் – ஹமாஸ் போர் ஒட்டுமொத்த உலக நாடுகளின் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய – உக்ரைன் போரை காட்டிலும் இந்த போரில் அப்பாவி மக்களின் உயிரிழப்பு மிகவும் கொடூரமாக இருந்து வருகிறது.


இஸ்ரேல் - ஹமாஸ் போர்:


கடந்த 7-ந் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பிறகு இதை போராக இஸ்ரேல் பிரகடனம் செய்தது. அதன்பின்பு, காசாவில் உள்ள ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் சரமாரியாக வான்வழி, தரைவழி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.


ஹமாஸ் தங்களது ஆயிரக்கணக்கான வீரர்களையும், மக்களையும் கொன்றதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதேசமயம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலிலும் ஹமாஸ் படையினர் மட்டுமின்றி காசாவில் உள்ள அப்பாவி மக்களும் உயிரிழந்துள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே நடக்கும் மோதலில் அப்பாவி மக்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.


எரிபொருள் பற்றாக்குறை:


ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்காத நிலையில், காசாவில் கர்ப்பிணி பெண்களும், பச்சிளங்குழந்தைகளும் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு ஆளாகியுள்ளனர். மின் தட்டுப்பாடு, தண்ணீர்ப்பற்றாக்குறை என காசா நகரம் முழுவதும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அங்குள்ள பல மருத்துவமனைகளும் மின் பற்றாக்குறையில் ஜெனரேட்டர் மூலமாக இயங்கி வருகிறது.


இந்த நிலையில், ஜெனரேட்டர்களுக்கான எரிபொருள் தேவை விரைவில் தீரும் நிலையில் உள்ளதாகவும், அதனால் எரிபொருள் தேவையை நிறைவேற்ற வேண்டும் என பல மருத்துவமனைகளும் வேண்டுகோள் விடுத்து வருகின்றன. காசாவில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டதாக கூறினாலும், 50 ஆயிரத்திற்கும் அதிகமான கர்ப்பிணி பெண்கள் தவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


உயிருக்கு ஆபத்து:


மேலும், இன்குபேட்டரில் சிகிச்சை பெற்று வரும் 130 குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் உயிர்களுக்கு எரிபொருள் பற்றாக்குறையால் ஜெனரேட்டர்கள் நின்றுவிட்டால், பெரும் ஆபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. வரும் மாதத்தில் மட்டும் சுமார் 5 ஆயிரத்து 500 குழந்தைகள் பிறப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தகவல்களும் வெளியாகியுள்ளது.


உலக நாடுகளும், ஐ.நா.வும் காசாவில் சிக்கித் தவிப்பவர்களுக்கு அளிக்கும் மருந்துகளும், உணவுகளும், அத்தியாவசிய பொருட்களும் காசா எல்லையை கடந்து அங்கு தத்தளித்துக் கொண்டிருப்பவர்களுக்கு சென்று சேர்வதில் சிரமமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பச்சிளங்குழந்தைகள், கர்ப்பிணிகள், அப்பாவி பொதுமக்களின் உயிரை காவு வாங்கும் இந்த போருக்கு ஒரு நிரந்தர முடிவு கொண்டு வர வண்டும் என்று அமைதியை விரும்பும் மக்கள் யாவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  


மேலும் படிக்க: Operation Ajay: 17 வது நாளாக நீடிக்கும் இஸ்ரேல் ஹமாஸ் போர்.. ஆப்ரேஷன் அஜய் மூலம் நாடு திரும்பிய 143 இந்தியர்கள்..


மேலும் படிக்க: Israel - Hamas War: 266 பேர் பலி- ஹமாஸ் படைக்கு அமெரிக்கா எச்சரிக்கை? உலக தலைவர்கள் இஸ்ரேல் வருகை