Israel - Hamas War: ஹமாஸ் பகுதியில் இஸ்ரேல் வீரர்கள் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 266 பேர் உயிரிழந்துள்ளனர்.
17வது நாளாக தொடரும் போர் - 266 பேர் பலி:
காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் இடையேயான மோதல், 17வது நாளாக நீடித்து வருகிறது. தொடர் தாக்குதல் சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். போரின் அடுத்தகட்டமாக வான்வழித் தாக்குதலை மிகத் தீவிரமாக இஸ்ரேல் ராணுவம் முடுக்கிவிட்டது. அதன்படி, நேற்று காலை தொடங்கி இன்று காலை வரையிலான கடைசி 24 மணி நேரத்தில், 177 சிறுவர்கள் உட்பட 266 பேர் மரணித்துள்ளதாக காஸா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டட இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
மனிதாபிமான உதவிகள் -ஆபத்தில் குழந்தைகள்:
போர் தொடங்கியதை தொடர்ந்து காஸாவில் உள்ள மக்களுக்கு தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதும் கேள்விக்குறியானது. இதையடுத்து 15 நாட்களுக்குப் பிறகு, இரண்டு தினங்களுக்கு முன்னதாக எகிப்தின் ராபா எல்லை வழியாக காஸாவிற்குள் நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. மருந்துகள், ரொட்டி மற்றும் பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. இதனிடையே, வென்டிலேட்டர்களை நம்பியிருக்கும் பல குழந்தைகள் காசாவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் உயிர்வாழ முடியாது என, இஸ்ரேல் படையினரால் முற்றுகையிடப்பட்ட கடலோரப் பகுதியில் உள்ள மருத்துவ பணியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது பேரழிவாக கருதப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்கா எச்சரிக்கை:
அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு அமைச்சரான லாய்ட் ஆஸ்டின் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ஈரானின் பினாமிகளின் ஈடுபாட்டின் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடையும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது. காஸாவில் சிக்கியுள்ள அமெரிக்கர்களை வெளியேற விடாமல் ஹமாஸ் அமைப்பினர் தடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்தரப்பு அமைப்பினரால் அமெரிக்கர்கள் யாரேனும் தாக்கப்பட்டால், அதற்கு பதிலடி அளிக்க பைடன் அரசு தயாராக உள்ளது. இந்த மோதலை நாங்கள் விரும்பவில்லை, தேடவில்லை, அதிகரிப்பதையும் விரும்பவில்லை. ஆனால், அமெரிக்கர்கள் தாக்கப்பட்டால், அதற்கு பதிலடி தர தயாராக இருக்கிறோம்” என தெரிவித்தனர். இதனிடையே, ஏற்கனவே பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் அமெரிக்காவின் டெல்டா படையை, ஹமாஸ் அமைப்பிற்கு எதிராக களமிறக்க இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ரகசியமாக திட்டமிடவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நேதன்யாகு விளக்கம்:
இதனிடையே, காஸாவிற்குள் தரைவழி தாக்குதலை தற்போதைய சூழலில் நடத்த வேண்டாம் எனவும், அங்குள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அமெரிக்க அதிபர் பைடன் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிற்கு வலியுறுத்தியுள்ளார். அதேநேரம், டெல் அவிவில் உள்ள கிரியாவில் போர் அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் மூத்த பாதுகாப்பு அதிகாரகளுடன் நேதன்யாகு ஆலோசனை நடத்தினார். அதைதொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே ஆகியோர் இந்த வாரம் இஸ்ரேலுக்கு வர உள்ளதாக அறிவித்துள்ளார்.