இந்தியா - கனடா இடையே கடுமையான கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், சூடானுக்கான முன்னாள் இந்தியத் தூதர் தீபக் வோஹ்ரா தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகள் டெல்லியில் உள்ள இந்தியா தலைமையேற்று நடந்திய ஜி20 உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இவர்களில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் ஒருவர். இந்நிகழ்ச்சி முடிந்து அவர் கிளம்ப வேண்டிய விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக ஜஸ்டின் ட்ரூடோ செப்டம்பர் 12 ஆம் தேதி வரை இந்தியாவில் இருக்க நேர்ந்தது. 


இதனிடையே கனடாவில் இருந்து வந்து பிரதமர் மற்றும் அவரது குழுவை அழைத்துச் செல்ல அனுப்பப்பட்ட  ராயல் கனேடியன் விமானப்படையின் சிசி-150 போலரைஸ் விமானத்தில் மாற்றுபாகங்களுடன் தொழில்நுட்ப வல்லுநர்கள் வந்து கோளாறை சரி செய்தனர். அவருக்கு இந்திய அரசு ஏர் இந்திய விமானத்தை அனுப்பி உதவ நினைத்த ஜஸ்டின் ட்ரூடோ அதனை நிராகரித்துவிட்டார். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டாலும் அவர் செப்டம்பர் 12 ஆம் தேதி கனடா திரும்பினார். 


இப்படியான நிலையில் அடுத்த சில தினங்களில் கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கனடாவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து மற்றொரு காலிஸ்தான் பயங்கரவாதியும் கொல்லப்பட்ட பிரச்சினை பெரிதானது. இதன் எதிரொலியாக கனடாவில் இருந்து இந்திய தூதரகத்தின் உயரதிகாரி வெளியேற்றப்பட்டார். இதற்கு பதிலடியாக கனடா தூதரை இந்தியா வெளியேற்றியது.


பின்னர்  பிரதமர் நரேந்திர மோடியுடன் தான் நேரடியாகவும், வெளிப்படையாகவும் பேசியதாக தெரிவித்தார். இப்படியாக இந்தியா - கனடா இடையேயான பிரச்சினை சென்றுக் கொண்டிருக்கும் நிலையில் சூடானுக்கான முன்னாள் இந்தியத் தூதர் தீபக் வோஹ்ரா தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி நேரலை விவாதம் ஒன்றில் பேசிய அவர், “ஜி20 மாநாட்டு வந்த ஜஸ்டின் ட்ரூடோ விமானத்தில் கொக்கைன் போதைப்பொருள் நிரப்பப்பட்டிருந்ததாகவும், இதை மோப்ப நாய்கள் கண்டறிந்தது என தனக்கு தகவல் தெரிய வந்ததாகவும், இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை எனவும் கூறியுள்ளார். 


இரண்டு நாட்களாக அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை எனவும், ஜஸ்டின் தன்னை ஒரு கனடிய ராம்போ போன்று சித்தரிக்க முயல்வதாகவும் தீபக் வோஹ்ரா தெரிவித்துள்ளார்.. இந்த விவாதத்தின்போது, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மூளை இருக்கிறதா? என்று கேள்வியெழுப்பிய தீபக் வோஹ்ரா அவர் ஒரு சிறு குழந்தை என விமர்சித்தார். மேலும் டெல்லி விமான நிலையத்திற்கு வந்தபோது அவர் சிக்கலாக இருந்ததை தனது மனைவி பார்த்தார்” எனவும் கூறியுள்ளார்.




மேலும் படிக்க: ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை.. ‘பலமுறை கோரிக்கையை நிராகரித்த கனடா’ .. இந்திய அதிகாரிகள் குற்றச்சாட்டு.. என்னதான் ஆச்சு?