காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கனடாவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இந்தியாவின் தீர்க்க முடியாத நீண்டகால பிரச்சனைகளில் ஒன்று ‘காலிஸ்தான்’ எனப்படும் தனி நாடு கோரிக்கை. சீக்கிய மக்கள் அதிகம் வாழும் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலங்களை இணைத்து காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடாக உருவாக வேண்டும் என்பது சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் இருந்தே போராட்டம் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா என உலகிலுள்ள பல்வேறு நாடுகளில் வசிக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தொடர்ந்து அங்குள்ள இந்திய தூதரங்கள் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 


அந்த வகையில் நட்புறவுடன் இருக்கும் கனடா நாட்டில் தொடரும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. 


இப்படியான நிலையில் சீக்கியர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் சர்ரே நகரில் குருநானக் சீக்கிய குருத்வாராவின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கொல்லப்பட்டார். இரண்டு மர்ம நபர்களால் அவர் கொல்லப்பட்டத்தை போலீசார் உறுதி செய்தனர். ஹர்தீப் சிங் காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி வரும் நீதிக்கான சீக்கியர் அமைப்பில் தொடர்ந்து செயல்பட்டு வந்தார்.


இதற்கிடையில்  அவர் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக கனடா அரசு குற்றம் சாட்டியிருந்தது. இதுதொடர்பாக பேசிய அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ‘இந்த விஷயத்தை தெளிவுப்படுத்துவதில் இந்திய அரசின் ஒத்துழைப்பு அவசியம்’ என கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து இந்திய தூதரகத்தின் உயர் அதிகாரி ஒருவரை கனடா அரசு நாட்டை விட்டு வெளியேற்றியது. 


இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடா நாட்டு தூதரக அதிகாரியை இந்தியா வெளியேற்றியது. இதனிடையே இந்த விவகாரத்தில் இருநாடுகள் இடையே பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், கனடாவில் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா பலமுறை விடுத்த கோரிக்கையை அந்நாட்டு அரசு தொடர்ந்து நிராகரித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


கிட்டதட்ட 9 பயங்கரவாத பிரிவுகள் கனடாவில் செயல்பட்டு வருவதாகவும், அவர்களை நாடு கடத்த கோரிக்கைளை விடுக்கப்பட்ட நிலையில் கனடா எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை உள்ளிட்ட பல செயல்களிலும் இந்த அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளது. இவர்கள் வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்து, பிரிவினைவாத உணர்வுகளை தூண்டி இந்தியாவில் திட்டமிட்ட தாக்குதல்களை நடத்துவார்கள். இது தொடர்பாக பல ஆவணங்களை கனடாவில் சமர்பித்த நிலையிலும் இந்தியாவின் கோரிக்கைகள் கவனிக்கப்படாமல் போய்விட்டது. 


மேலும் டாஷ்மேஷ் படைப்பிரிவின் தலைவர் குர்வந்த் சிங்க், பாகிஸ்தானை தளமாக கொண்ட பயங்கரவாதியாக அறியப்படும் பகத்சிங் பிரார், மொனிந்தர் சிங் புல், சதீந்தர் பால் சிங் கில் என பலரும் கனடாவில் இருக்கும் இந்தியாவால் தேடப்படுபவர்கள் ஆவர் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.  இப்படியான சூழலில் அடுத்தடுத்து இருநாடுகள் உறவில் என்ன நடக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு உலகநாடுகளிடையே எழுந்துள்ளது.