உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்து ஆளப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தற்போது எழுந்துள்ளது. அமெரிக்க  அதிபர் தேர்தல், அடுத்தாண்டு நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது.  தற்போது, அதிபராக உள்ள ஜோ பைடன், அடுத்த தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். 


சூடுபிடித்த அமெரிக்க அதிபர் தேர்தல்:


பைடனை தவிர்த்து, ராபர்ட் கென்னடி, மரியான் வில்லியம்சன் ஆகியோரும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் போட்டியில் களம் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். வேட்பாளர்களுக்கிடையே நடைபெறும் போட்டியில் போட்டியிட்டு, சொந்த கட்சியினர் மத்தியில் யாருக்கு செல்வாக்கு அதிகம் இருக்கிறதோ அவரே, கட்சியின் சார்பில் அமெரிக்காவில் தேர்தலில் நிற்க முடியும். ஜனநாயக கட்சியை போல, குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் உள்ளிட்டோர் அதிபருக்கான வேட்பாளர் போட்டியில் களம் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இவர்களை தவிர, இந்திய வம்சாவளியான நிக்கி ஹேலி, விவேக் ராமசாமி ஆகியோரும் வேட்பாளர் தேர்வில் போட்டியிட உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.


மற்றவர்களை காட்டிலும், தொழிலதிபரான விவேக் ராமசாமிக்கு பல்வேறு தரப்பினரின் ஆதரவு பெருகி வருகிறது. இதில், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், விவேக் ராமசாமி, தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர். அவரது பெற்றோர்கள் கேரளாவில் வாழ்ந்து வந்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் உள்ள நிலையில், விவேக் ராமசாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 


வைரல் வீடியோ:


பிரசாரத்திற்கிடையே மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார். அப்போது, தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர், விவேக் ராமசாமியை சந்தித்து பேசியுள்ளார். அவருடன் விவேக் ராமசாமி தமிழில் உரையாடல் மேற்கொண்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. விவேக் ராமசாமி தமிழில் உரையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், "உங்களிடம் கேட்க கேள்வி ஒன்றும் இல்லை. ஆனால், உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன். உங்களை அதிபராக பார்ப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது" என ஆங்கிலத்தில் ஒருவர் கூறுகிறார்.  






அதற்கு விவேக் ராமசாமி, "நன்றி. பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். ரொம்ப பெருமையாக இருக்கிறது" என பதில் அளிக்கிறார். தொடர்ந்து பேசிய அந்த நபர், "என்னுடைய பெற்றோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்" என கூறுகிறார். "அப்படியா, எங்கே" என விவேக் ராமசாமி கேட்கிறார். அதற்கு, "வேலூர்" என நபர் பதில் அளிக்கிறார். இதை தொடர்ந்து, தமிழில் உரையாடிய விவேக் ராமசாமி, "நல்லா இருக்கே. நானும் தமிழில் பேசுவேன். பாலக்காடு தமிழ் பேசுவேன்" என்கிறார்.




மேலும் படிக்க 


Dalai Lama: ”சீனாவிடமிருந்து சுதந்திரம் வேண்டாம்; ஆனால்...” - திபெத் விவகாரத்தில் தலாய் லாமா கறார்!