சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியே தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது. இரண்டு முறைக்கு மேல் ஒருவர் அதிபராக பதவி வகிக்க முடியாது என்ற அரசியல் சாசன அமர்வே மாற்றி அமைக்கப்பட்டு, தற்போதைய அதிபரான ஜி ஜின் பிங் மூன்றாவது முறையாக அதிபராக பதவியேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கொரோனா பரவலை கட்டுப்படுத்த சீன அரசு பின்பற்றும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 


முன்னாள் அதிபர் மரணம்:


இந்நிலையில் தான், சீனாவின் முன்னாள் அதிபரான ஜியாங் ஜெமின் உடல்நலக்குறைவால் உயிரிழந்து உள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. 96 வயதான ஜியாங் ஜெமின் லுகேமியா எனப்படும் ரத்த புற்றுநோய் பாதிப்பு மற்றும் உடலுறுப்புகள் பல  செயலிழந்ததன் காரணமாக,  ஷாங்காயில் உள்ளூர் நேரப்படி மதியம் 12.13 மணியளவில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மரணத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில்,  சீன அரசு தரப்பில் துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜியாங் ஜெமின் வகித்த பதவிகள்:


1989 முதல் 2004-ம் ஆண்டு வரை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், 1993 முதல் 2003-ம் ஆண்டு வரை சீன அதிபராகவும்  ஜியாங் ஜெமின் பதவி வகித்துள்ளார். 1989-ம் ஆண்டு தியெனமென் ஆர்ப்பாட்டங்கள் ஒடுக்கப்பட்ட பின்னர் அதிகாரத்துக்கு வந்த ஜியாங் ஜெமின், உலக அரங்கில் வலிமையான நாடாக்கும் இலக்கு நோக்கி சீனாவை வழி நடத்தினார். அவர் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாகவே, உலக அரங்கில் சீனா தற்போது அபரிவிதமான பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது.






தியானமென் படுகொலை:


சீனாவில், ஜனநாயக சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், ஊழலை ஒழிக்கவும் வலியுறுத்தி கடந்த 1989-ஆம் ஆண்டில் மாணவர்கள் தொடங்கிய போராட்டம், மக்களின் எழுச்சியாக மாறிப் போனது. ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்ட நிலையில், பீராங்கிகளுடன் அங்கு வந்த ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 800-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. 1989ம் ஆண்டு  ஜூன் 4ம் தேதி நடைபெற்ற இந்த படுகொலை,   சீனாவின் நிகழ்ந்த மோசமான சம்பவங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.


 


ஜியாங் ஜெமின் ஆட்சி:


 படுகொலைக்கு பின்பு சீனாவில் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிரான எதிர்ப்பு மக்களிடையே  வலுத்து இருந்த நிலையில் கட்சி இரு பிரிவுகளாக பிளவுபட்டு இருந்தது. அப்போது தான் யாரும் எதிர்பாராத விதமாக கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக ஜியாங் ஜெமின் தேர்வு செய்யப்பட்டார்.  அவரது தலைமையின் கீழ் பல்வேறு மறுமலர்ச்சி சீர்திருத்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அவரது ஆட்சியின் போது தான் பிரிட்டிஷ் பிடியிலிருந்து ஹாங்காங்கிற்கு 1997ம் ஆண்டு விடுதலை கிடைத்தது. உலக வர்த்தக அமைப்பில் 2001ம் ஆண்டு சீனா நுழைந்தது.


ஜியாங் ஜெமின் உலக நாடுகளின் வர்த்தகத்திற்காக சீனாவின் வாயில்களை திறந்ந்துவிடாலும் , நாட்டில் பல அடுக்குமுறைகளை கையாண்டார். மனித உரிமை ஆர்வலர்கள் , தொழிலாளர் மற்றும் ஜனநாயக சார்பு ஆர்வலர்களை சிறையில் அடைத்தார்.  கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார ஏகபோகத்திற்கு அச்சுறுத்தலாகக் கருதிய ஃபாலுன் காங் எனும்  ஆன்மீக இயக்கத்தை தடை செய்தார்.


கம்யூனிஸ்டில் முக்கியத்துவம்:


 மார்க்சிசக் கொள்கைகளை வலுப்படுத்தும் விதமாக, ஜியாங் ஜெமின் எழுதிய "மூன்று பிரதிநிதிகள்' என்ற கொள்கை கள், மத்திய மற்றும் மாகாண அரசியல் சாசனகளில் சேர்க்கப்பட்டுள்ளது.  முன்னதாக கடந்த 2011ம் ஆண்டு , ஜியாங் ஜெமின் இறந்து போனதாக, ஹாகா  வானொலி நிலையம், அறிவித்தது. அது பெரும் பேசுபொருளான நிலையில், அதைப் பொய்யாக்கும் விதத்தில், சீனாவில் மன்னராட்சி தூக்கி எறியப்பட்டு, 100 வது ஆண்டு விழாவை ஒட்டி  நடந்த ஆளும் கட்சிக் கூட்டத்தில் ஜியாங் ஜெமின் கலந்துகொண்டார்.