கரூரில் செல்போன் நிறுவனம் ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு ஆணைய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கரூர் தாந்தோணிமலையை சேர்ந்தவர் அன்புத்தேன். முதுகலை பட்டதாரியான இவர் தனியார் செல்போன் நிறுவனத்தின் சிம் கார்டை பயன்படுத்தி வந்தார். அதற்கான மாதாந்திர தொகையை செலுத்த சென்றபோது ஊழியர் ஒருவர், புதிய பிளான்கள் வந்துள்ளன என்றும், அந்த பிளானில் சேர்ந்தால் அதிக பயன் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து, அந்த பிளானில் அன்புத்தேன் சேர்ந்த பிறகு அவர் அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்று நிறுவன ஊழியர்கள் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் அவரது 'சிம்' கார்டையும் முடக்கியதாக தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அன்புத்தேன் கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார். இதனை விசாரித்த மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு ஆணைய நீதிபதிகள் மேற்கண்ட வழக்கு தொடர்பாக செல்போன் நிறுவனத்துக்கு அன்புத்தேன் செலுத்திய கட்டணத்தை வட்டியுடன் அவருக்கு திருப்பித்தர வேண்டும். மேலும் ரூ.25 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்து உத்தரவிட்டனர்.
மொபைல் போனுடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள்
குளித்தலையில் அரசு மகளிர் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் தலா 1500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். இரண்டு பள்ளி மாணவ, மாணவியர்களின் சிலர் மொபைல் போனுடன் பள்ளிக்கு வருகின்றனர். மாணவ, மாணவியருக்கு மொபைல் போனால் நல்ல தகவல்களை பெற முடிந்தாலும் அவர்கள் விழிப்புணர்வின்றி தவறாக பயன்படுத்தினால் ஆபத்து உண்டு தனியார் பள்ளிகளில் நிர்வாகத்தினர் கண்காணிப்பு தீவிரமாக இருப்பதால் பெரும்பாலும் மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு மொபைல்போன் எடுத்துச் செல்வது தவிர்க்கப்படுகிறது.
அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் அறிவுறுத்தினாலும் கூட சில மாணவ, மாணவியர் அதனை பொருட்படுத்தாமல் மொபைல் போன் கொண்டு வரும் நிகழ்வுகள் நடக்கின்றன. குளித்தலை பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் பள்ளிகள் முடிந்து பஸ்க்காக காத்திருக்கும் மாணவர்கள் மொபைல் போன் உடன் இருப்பதை காண முடிகிறது. அவர்கள் ஆன்லைன் ரம்மி வீடியோ கேம்கள் ஆகியவற்றில் அடிமையாகும் அபாயம் உள்ளது. மேலும் தவறான செயல்களில் செல்லும் ஆபத்தும் உள்ளது. இதுகுறித்து குளித்தலையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது: அரசு பள்ளிகளில் பெரும்பாலும் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் படித்து வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ஒரு சில மாணவ மாணவியர்கள் பெற்றோர்கள் இருக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டுப்படாமல் நன்னெறிகளை பின்பற்ற தவறுகின்றனர். இது போன்ற மற்ற மாணவியரையும் தவறான வழிக்கு இழுத்துச் செல்கின்றனர்.
அரசு பள்ளிகளில் மொபைல் போன் கொண்டு வரும் மாணவ மாணவியர்களை கண்டறிந்து அறிவுரை கூறி அவர்களின் நல்வழிப்படுத்த வேண்டும் பெற்றோருக்கு இதில் முக்கிய பங்கு உண்டு தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு மொபைல் கொண்டு செல்வதை தவிர்க்க அவர்களை கண்காணிக்க வேண்டும் ஆசிரியர்கள் நல்வழிப்படுத்தினால் அதை மாணவ மாணவியர் விபரீதமாக புரிந்து கொள்ளக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதாவிடம் கேட்டபோது, "பள்ளிக்கு மாணவ, மாணவிகள் மொபைல் போன் கொண்டு வர அனுமதி இல்லை. சமீபத்தில் அரசு பள்ளிகளில் கலைத்திருவிழா நடந்தது. இதனால் விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தெரியாமல் மொபைல் போன் கொண்டு வந்திருக்கலாம் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர்கள் மொபைல்போன் கொண்டு வரக்கூடாது என அறிவுறுத்தப்படும் மீறி கொண்டு வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.