ஒருபுறம் போரை நிறுத்த தீவிர முயற்சிகள் நடந்து வந்தாலும், உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதை ரஷ்யா நிறுத்தவில்லை. இந்நிலையில், இன்று உக்ரைன் மீது 728 ட்ரோன்களையும், 13 ஏவுகணைகளையும் வீசி தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா. இந்த தாக்குதலில் உக்ரைனின் பல பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் பற்றி எரிந்த நிலையில், மீட்புப் பணிகள் நடைபெறும் வீடியோவையும், ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உக்ரைன் விமானப்படையின் பதிவு
3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் ரஷ்யா-உக்ரைன் போரில், இதுவரை இல்லாத அளவிலான ஒரு மிகப்பெரிய தாக்குதரை ரஷ்யா இன்று நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் குறித்த உக்ரைன் விமானப்படையின் பதிவின்படி, ரஷ்யா 741 வான்வழி ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளது.
அதன்படி, 728 ட்ரோன்கள், 7 இஸ்கந்தர்-கே க்ரூஸ் ஏவுகணைகள், 6 கின்ஹால் ஏவுகணைகளை ரஷ்யா ஏவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 718 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை, உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தாக்கி அழித்துவிட்டதாக உக்ரைன் விமானப்படையின் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரை நிறுத்த ரஷ்யா விரும்பவில்லை என்றும், அவர்கள் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் பதிவு என்ன.?
ரஷ்ய தாக்குதலில் தீப்பற்றி எரியும் கட்டிடங்களில் மீட்புப் பணி நடைபெறும் வீடியோவை பகிர்ந்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஒரே நாளில் நடத்தப்பட்ட மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் இது என்று தெரிவித்துள்ளார். 741 இடங்களை குறிவைத்து, பல்வேறு வகையான 728 ட்ரோன்கள் மற்றும் 13 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், அவற்றில் பெரும்பாலானவை தங்கள் வான் பாதுகாப்பு அமைப்பினால் வீழ்த்தப்பட்டதாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் தாக்குதலால் சேதமடைந்த பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள அவர், லட்ஸ்க் பகுதியை குறி வைத்தே முக்கிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதோடு சேர்த்து, டிப்ரோ, சைடோமிர், கிவ், க்ரோவோஹ்ரட், மிகோலைவ், சுமி, கார்கிவ், க்மெல்னிட்ஸ்கி, செர்கஸி மற்றும் செர்னிஹிவ் பகுதிகளிலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும், போர் நிறுத்தம் மற்றும் அமைதியை ஏற்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நேரத்தில், அதை நிராகரிக்கும் விதமாக ரஷ்யா இத்தகைய தாக்குதலை நடத்தியுள்ளதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
ரஷ்யா மீது கடுமையான தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்பதற்கு இதுவே ஒரு சான்று எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி மீது மிகக்கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்றும், அந்த ஏற்றுமதியின் மூலம் பெறப்படும் பணத்தை வைத்துதான், 3 ஆண்டுகளுக்கும் மேலாக போருக்கான செலவுகளை அந்நாடு மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ரஷ்யா மீது மட்டும் தடைகளை விதிக்காமல், அதனிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் ஜெலன்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், போரை நிறுத்த ரஷ்யா சிந்திக்கும் வகையிலும், மீண்டும் புதிய தாக்குதலை நடத்தாமல் இருப்பதற்கும், அந்நாட்டிற்கு எவ்வாறு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தங்கள் கூட்டாளிகளுக்கு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.