அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏலியன்கள் குறித்த விசாரணையில், அமெரிக்காவிடம் ஏலியன்களின் வாகனங்கள் மற்றும் ஏலியன்களின் உடல்கள் பல ஆண்டுகளாக இருப்பதாக முன்னாள் விமானப்படை உளவுத்துறை அதிகாரி டேவிட் க்ரூஷ் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவர் ஏற்கனவே ஒரு முறை அமெரிக்காவிடம் ஏலியன்களின் வாகனங்கள் இருப்பதாக கூறியிருந்த நிலையில் மீண்டும் இந்த வாக்குமூலத்தை அளித்துள்ளார். 






அதுமட்டுமின்றி அமெரிக்க நாடாளுமன்ற விசாரணையில் பல விஷயங்களை அவர் அம்பலப்படுத்தியுள்ளார். முக்கியமாக அமெரிக்காவில் ஏலியன்களின் வாகனங்கள் இருப்பது உண்மை தான், ஒரு சில வாகனங்கள் உடையாமல் நல்ல நிலையில் உள்ளது என்றும் அதனை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஏலியன்களின் வாகனங்கள் மட்டுமல்லாமல் வேற்றுகிரகவாசிகளின் உடல்களும் அமெரிக்காவிடம் கைவசமாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். 






தொடர்ந்து விசாரணையில், தன்னுடன் அமெரிக்க அரசாங்கத்தில் பணிபுரிந்தவர்களில் சிலர், இந்த ஏலியன்களின் நடவடிக்கைகளால் உடல்ரீதியாக காயமடைந்ததாகவும் கூறியுள்ளார். அமெரிக்க கைப்பற்றியுள்ள வாகனங்கள் மனிதர்களால் அல்லது மனிதர்கள் பயன்படுத்தக்கூடிய வாகனங்கள் அல்ல என தெளிவாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனை பற்றி ஏற்கனவே பொதுவெளியில் கூறியதற்கு அவர் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். 


தொடர்ந்து பேசிய அவர், “ அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஏலியன்களின் நடமாட்டங்கள் இருந்து வருகிறது. ஒரு காலக்கட்டத்தில் அலாஸ்கா கடல் பகுதியில் ஏலியன்களின் நடமாட்டம் தினசரி இருந்து வந்தது. பின் அதனை அமெரிக்கா கைப்பற்றியது” என வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆனால் இந்த கருத்துக்கள் தவறானது என பெண்டகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏலியன்களின் வாகனங்கள் மற்றும் உடல்கள் குறித்து பல்வேறு கேள்விகள் டேவிட் க்ரூஷிடம் கேட்கப்பட்டது.  அடுத்த விசாரணையில் இது தொடர்பாக யாரை அழைக்க  வேண்டும் என கேட்கவே, டேவிட் க்ரூஷ் விசாரணைக்கு பின் அந்த பெயர் பட்டியலை ஒப்படைத்தார். அடுத்தக்கட்ட விசாரணையில் டேவிட் க்ரூஷுடன் மேலும் சிலர் விசாரிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


DD Returns: 'தல'ன்னு சொல்லாத டா' .. அஜித்தை பற்றி பேசிய டிடி ரிட்டர்ன்ஸ்.. கொண்டாடும் ஏகே ரசிகர்கள்..