உலகில் மிகவும் முக்கியமான உறவுகளில் தந்தை-மகள் உறவும் ஒன்று. எப்படி தாயும்-மகனும் ஒன்றாக இணைந்து அன்பாக இருப்பார்களோ அதே மாதிரி தான் பெண் பிள்ளைகளும் அவர்களுடைய அப்பாவும். எல்லோருக்கும் அவர்களுடைய தந்தை தான் முதல் ஹீரோ. அதிலும் பெண் பிள்ளைகளுக்கு தன்னுடைய தந்தை தான் எப்போதும் அவர்களின் முதல் ஹீரோ. அவர்கள் தன்னுடைய கணவர் வந்தாலும் அவரை தந்தைக்கு அடுத்த ஹீரோவாக பெரும்பாலான பெண்கள் பார்ப்பார்கள். 


இந்த உறவு தமிழ் சினிமாவிலும் பிரதிபலித்துள்ளது. குறிப்பாக நா முத்துக்குமார் வரிகளில் இதற்கு என்று ஒரே பாடலே உள்ளது. அந்தப் பாடல், “மகளை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை” என்று தொடங்கும். மேலும் அப்படலின் வரிகளில், “உன் முகம் பார்த்தால் தோணுதடி வானத்து நிலவு சின்னதடி மேகத்தில் மறைந்தே பார்க்குதடி உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி..” என்று தந்தை மகளை பார்த்தும் பாடும் வகையில் இருக்கும். 


இதைப் போல் தந்தைக்கு மகள் ஒருவர் கொடுத்த பரிசை பார்த்து தந்தை நெகிழ்ந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் மெரிலாந்து பகுதியைச் சேர்ந்தவர் டெரிக் காட்வின். 51 வயதான இவருக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் அமெரிக்கா கால்பந்து என்று அழைக்கப்படும் என்.எஃப்.எல் விளையாட்டின் தீவிர ரசிகர். அதிலும் குறிப்பாக பிலடெல்பியா ஈகில்ஸ் என்ற அணியை பல ஆண்டு காலங்களாக பின் தொடர்ந்து வரும் வெறித்தனமான ரசிகர். 




இவர் தன்னுடைய வாழ்நாளில் ஒருமுறையாவது அந்த அணியின் ஆட்டத்தை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன் இருந்து வந்துள்ளார். எனினும் அந்தத் தொடர் நடைபெறும் போது இவருடைய மகளுக்கு கூடைப்பந்து போட்டிகள் மற்றும் பயிற்சி இருக்கும் என்பதால் தன்னுடைய ஊரில் மகளுடன் இருப்பதையே விரும்பியுள்ளார். இப்படி ஒவ்வொரு ஆண்டும் அவர் என்.எஃப்.எல் போட்டிக்கு போகாமலே இருந்து வந்துள்ளார். இதை அறிந்து கொண்ட அவருடைய மகள் கடந்த வாரம் தந்தையர் தினத்தன்று அவருக்கு பரிசை கொடுத்துள்ளார். 


அந்தப் பரிசுடன் ஒரு கடிதத்தையும் கொடுத்துள்ளார். அதில்,”நீங்கள் எப்படி ஒரு அருமையான தந்தை என்று எனக்கு தெரியும். அத்துடன் உங்களை தந்தையாக பெற்றதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு ஆண் எப்படி என்னை நடத்த வேண்டும் என்பதை நீங்கள் எனக்கு உணர்த்தி உள்ளீர்கள். உங்களுக்கும் எனக்கும் இருப்பது சாதாரண தந்தை மகள் உறவு அல்ல. நாம் இருவருக்கும் இடையேயான பந்தம் விளையாட்டு மூலம் மிகவும் அதிகரித்துள்ளது. விளையாட்டு ஆர்வலரான உங்களிடம் இருந்து தான் எனக்கும் விளையாட்டு ஆர்வம் வந்தது. 


 






என்னை கூடைப்பந்து விளையாட்டிற்கு அறிமுகம் செய்து வைத்தது நீங்கள் தான். அத்துடன் என்னை முதன் முதலாக நேரடியாக ஒரு என்.பி.ஏ கூடைப்பந்து விளையாட்டை பார்க்க அழைத்து சென்றீர்கள். அந்த நிகழ்வு என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம். இப்படி என்னுடைய ஆசைகளை நிறைவேற்றிய நீங்கள் உங்களுடைய ஆசையை பற்றி யோசிக்கவே இல்லை. ஆகவே இம்முறை உங்களுடைய கனவு அணியான ஈகில்ஸ்அணியின் போட்டியை நாம் இருவரும் நேரில் பார்க்க செல்கிறோம்” என்று எழுதியுள்ளார். 


 






இந்தக் கடித்தத்துடன் அந்தப் போட்டிக்கான டிக்கெட்டையும் உடன் வைத்து அளித்தார். இதை வாங்கி கடிதத்தை படித்தவுடன் தந்தை டெரிக் நெகிழ்ந்து கண்ணீருடன் ஆனந்தப்படுகிறது. இதையும் மகள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது ட்விட்டர் பலரின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் பதிவிற்கு  கீழ் பலரும் தன்னுடைய தந்தையுடன் இருந்த் சிறந்த தருணத்தையும் பதிவிட்டு வருகின்றனர். இப்படி தந்தை-மகள் உறவு என்பது பல எல்லைகளை தாண்டியும் எப்போதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: கத்திப்பாரா தெரியும்.... அதே மாதிரி உலகின் டாப் 10 பாலங்கள் தெரியுமா?