சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி, பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இறுதியாக, விஞ்ஞான உலகின் தொடர் முயற்சிகளால் கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
விஞ்ஞான உலகின் முயற்சியால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கொரோனா:
இருப்பினும், கொரோனா தடுப்பூசியின் நம்பகத்தன்மை என்பது தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. அது, ஆபத்தானது, பாதுகாப்பற்றது போன்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதை பொய்யாக்கும் விதமாக தடுப்பூசியின் செயல்திறன் தொடர்பாக பல்வேறு மருத்துவ ஆய்வுகள் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதாக உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி ஆபத்தானது என எலான் மஸ்கின் பெரும்பாலான பாலோவர்கள் கூறி வரும் நிலையில், எலான் மஸ்கின் இந்த கருத்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தடுப்பூசி குறித்து உளறிய எலான் மஸ்க்:
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் குறைந்து வருகிறது என்றும் பல நாடுகள் அதை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதாகவும் பயனர் ஒருவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டிருந்தார். அதை பகிர்ந்த எலான் மஸ்க், இந்த கருத்தை தெரிவித்துள்ளார். "எந்த வேலையை செய்ய வேண்டும் என்றாலும் தடுப்பூசியையும் பூஸ்டர் டோசையும் போட்டு கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்துவது மூர்க்கத்தனமானது. இது எனக்கு கவலை அளிக்கிறது. அனைத்தையும் கெடுத்து விடுகிறது" என அந்த வீடியோவில் எலான் மஸ்க் கமெண்ட் செய்துள்ளார்.
மேலும் குறிப்பிட்ட அவர், "எனது பணியாளர்கள் மத்தியில் கட்டாய தடுப்பூசி கொள்கையை அமல்படுத்துவதை விட சிறைக்கு சென்றிருப்பேன். மூன்றாவது தடுப்பூசி போட்டு கொண்டதால் மருத்துவனைக்கு சென்றேன். தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு முன்பே கொரோனாவால் பாதிக்கப்பட்டேன் (லேசான குளிர் அறிகுறிகள்). பயணம் செய்வதற்காக மூன்று தடுப்பூசிகளைப் போட்டு கொள்ள வேண்டியிருந்தது" என்றார்.
மருத்துவ ஆய்வுகள் கூறுவது என்ன?
கொரோனா தடுப்பூசிகள் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் கூறுகிறது. பொதுவாக, ஊசி போடும் இடத்தில் வலி மற்றும் வீக்கம் ஏற்படலாம். சோர்வு, தலைவலி, குளிர் அல்லது தசை வலி ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரிதிலும் அரிதான நிகழ்வுகளில், தடுப்பூசி செலுத்தி கொள்பவருக்கு மயோர்கார்டிடிஸ் அல்லது பெரிகார்டிடிஸ் ஏற்படலாம்.
இதயத்தின் நடுத்தர தசை அடுக்கில் வீக்கம் ஏற்பட்டால் அது மயோர்கார்டிடிஸ் எனப்படுகிறது. இதயத்தைச் சுற்றியுள்ள மெல்லிய, சாக் போன்ற திசுக்களின் வீக்கம் மற்றும் எரிச்சல் ஏற்பட்டால் அது பெரிகார்டிடிஸ் எனப்படும். பொதுவாக, மயோர்கார்டிடிஸ் மற்றும் பெரிகார்டிடிஸ் லேசானதாக இருக்கும். தானாகவே குணமாகும். ஆனால், மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மருத்துவ கவனிப்பு தேவைப்படலாம் அல்லது ஆபத்தாக போய்விடும்.