அடுத்த 2 ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி மூலம் சுமார் 50 ஆயிரம் அரசுப் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி விடைத்தாள் மதிப்பீட்டுக்கு புது தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


2022 ஜூன் மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்ற 10,205 பேர் அரசின் பல்வேறு துறைகளில் இளநிலைப் பணியாளர்களாகப் பணியில் சேர உள்ளனர். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில், தேர்வில் வெற்றி பெற்றோருக்குப் பணி ஆணைகள் வழங்கி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். 


அப்போது அவர் கூறும்போது, ''டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் விரைவாக விடைத் தாள்களை மதிப்பீடு செய்ய, ரூ.95 லட்சம் மதிப்பீட்டில், High Speeg Evaluation என்னும் உயர் தொழில்நுட்ப வசதி பயன்படுத்தப்பட்டுள்ளது. 



நடப்பு ஆண்டில் 17 ஆயிரம் பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட உள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி மூலம் சுமார் 50 ஆயிரம் அரசுப் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. மத்திய அரசுப் பணிகளில் தமிழக மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. ஆசிரியர் பணிக்கான தேர்வு வெளிப்படையாக நடத்தப்பட உள்ளது'' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.