உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள எலான் மஸ்க், இந்த மாதத்தின் இறுதியில் இந்தியா வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், கடைசி நேரத்தில் தனது இந்திய பயணத்தை ஒத்திவைப்பதாக எலான் மஸ்க் அறிவித்தார்.


சீனாவுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த எலான் மஸ்க்:


டெஸ்லா நிறுவனத்தின் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் தனது பயணத்தை ரத்து செய்ததாக கூறப்பட்டது. ரத்து செய்யப்பட்ட இந்திய பயணத்தை எப்போது மேற்கொள்வார் என்பது குறித்து இன்னும் அறிவிக்கவில்லை.


இப்படிப்பட்ட சூழலில், இந்திய பயணத்தை ரத்து செய்த ஒரே வாரத்தில் எலான் மஸ்க் சீனா சென்றுள்ளார். டெஸ்லா நிறுவன மின்சார வாகனங்களின் இரண்டாவது மிகப் பெரிய சந்தையாக உள்ள சீனாவுக்கு அவர் பயணம் மேற்கொண்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


தலைநகர் பெய்ஜிங்கில் சீன அரசின் மூத்த தலைவர்களை சந்திக்க எலான் மஸ்க் திட்டமிட்டிருப்பதாக விவரம் அறிந்தவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். சந்திப்பின்போது, சீனாவில் முழு சுய ஓட்டுநர் (FSD) மென்பொருளை அறிமுகப்படுத்துவது குறித்தும் இது தொடர்பாக சீனாவில் சேகரிப்பட்ட தகவல்களை வெளிநாட்டுக்கு பரிமாற்றம் செய்யப்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மெகா திட்டம் என்ன?


சீன வாடிக்கையாளர்களுக்கு முழு சுய ஓட்டுநர் (FSD) மென்பொருளானது விரைவில் கிடைக்க செய்யப்படும் என எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் குறிப்பிட்டிருந்தார். எலான் மஸ்கின் சீன பயணம் பெரிய அளவில் விளம்பரப்படுத்தவில்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.


கடந்த 2021 ஆம் ஆண்டு முதல், சீனக் கட்டுப்பாட்டாளர்களுக்குத் தேவையான அனைத்து தரவுகளையும் ஷாங்காயில் உள்ள உற்பத்தி தொழிற்சாலை மூலம் டெஸ்லா சேகரித்தது. ஆனால், அந்த தரவுகள் எதனையும் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லவில்லை.


டெஸ்லா தனது தன்னியக்க மென்பொருளான முழு சுய ஓட்டுநர் மென்பொருளை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சந்தையில் அறிமுகப்படுத்தியது. ஆனால், சீன வாடிக்கையாளர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அந்த மென்பொருளை சீனாவில் இன்னும் கிடைக்கச் செய்யவில்லை.


டெஸ்லா நிறுவனத்தை பொறுத்தவரையில், தனது மின்சார வாகனங்களுக்கான தேவையை அதிகரிக்க, சந்தையில் அடுத்து விலையில் பல்வேறு சலுகைகள் வழங்கின. ஆனாலும், அந்நிறுவன வாகன விற்பனை சரிவை சந்தித்து இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழலில் தான், டெஸ்லாவில் பணிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


இதையும் படிக்க: "மூச்சு விட முடியல" மீண்டும் ஒரு ஜார்ஜ் ப்ளாய்ட் சம்பவம்.. அமெரிக்காவில் கறுப்பினத்தவர் கொலை!