US Black Man: இந்தியாவில் சாதிய கொடுமை போல அமெரிக்காவில் இனவெறி பல நூற்றாண்டுகளாகவே பிரச்னையாக இருந்து வருகிறது. கறுப்பின மக்கள் மீது வன்முறை கட்டவிழ்க்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது.
கறுப்பினத்தவருக்கு எதிராக நடக்கும் அடக்குமுறைகள்:
குறிப்பாக, காவல்துறையினரால் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் கொல்லப்பட்டது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் கடந்த 2020ஆம் ஆண்டு நடந்தாலும் அது ஏற்படுத்திய வலி நம் மனதில் இருந்து மறையாமல் வடுவாக மாறியுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்கா ஓஹியோ மாகாணத்தில் காவல்துறையினரின் அடக்குமுறை காரணமாக கறுப்பினத்தை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த 18ஆம் தேதி நடந்தது.
மதுபான விடுதியில் கறுப்பினத்தவர் ஒருவரை தரையில் தள்ளி, அவருக்கு கைவிலங்கு போட்டுள்ளனர். அதோடு நிற்காமல் தங்களின் கால்களால் அவரின் கழுத்தை காவல்துறை அதிகாரிகள் நெரித்துள்ளனர். தன்னால் மூச்சு விட முடியவில்லை என அந்த இளைஞர் கதறியுள்ளார். இறுதியில், அவர் துடிதுடிக்க இறந்துள்ளார்.
மீண்டும் மீண்டும் கொல்லப்படும் ஜார்ஜ் பிளாய்ட்:
இந்த சம்பவம், ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்த அதே சம்பவத்தை நமக்கு நினைவூட்டுகிறது. மரணம் அடைந்த கறுப்பினத்தவர் ஃபிராங்க் டைசன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவருக்கு வயது 53. டைசனுக்கு நடந்த கொடூர சம்பவம் அங்கிருந்து கேமராவில் பதிவாகியுள்ளது. அதை, ஓஹியோ காவல்துறை வெளியிட்டுள்ளது.
கடந்த 18ஆம் தேதி, மின் கம்பத்தில் மோதி கார் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. தகவல் அறிந்து காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியவர் மதுபான விடுதிக்கு தப்பி சென்றுவிட்டதாக அங்கிருந்தவர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து, அருகில் உள்ள மதுபான விடுதிக்கு காவல்துறை அதிகாரிகள் செல்கின்றனர். அங்கு, நின்று கொண்டிருந்த டைசனிடம் காவல்துறை அதிகாரிகள் வாக்குவாதம் செய்கின்றனர். இதையடுத்து, அவரின் கைகளை மடக்கி பிடிக்க காவல்துறை அதிகாரிகள் முயல்கின்றனர்.
நடந்தது என்ன?
அப்போது, தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாகவும் அதிகாரிகளை அழைக்கும்படியும் டைசன் கத்துகிறார். அவரை தரையில் தள்ளி, அவரின் கைகளில் விலங்கு போடுகின்றனர். அதோடு நிற்காமல், காவல்துறை அதிகாரி ஒருவர், தன்னுடைய கால்களால் டைசனின் கழுத்தை நெரிக்கிறார்.
தன்னால் மூச்சு விட முடியவில்லை, கழுத்தில் இருந்து எழுந்திருங்கள் என டைசன் கதறியுள்ளார். "ஒன்றும் இல்லை, நீ நன்றாக இருக்கிறாய்" என அதிகாரி ஒருவர் கூறுகிறார். சிறிது நேரத்தில், தரையில் மூச்சு பேச்சின்றி டைசன் கிடக்கிறார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர்கள், டைசனை பாரில் இருந்து ஸ்ட்ரெச்சரில் வெளியே கொண்டு வந்து ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு ஏற்றி சென்றனர். மருத்துவமனையில், அவர் இறந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.