உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக உருமாறிய ஒமிக்ரான் கொரோனா தொற்று பாதிப்பு தற்போ வேகம் எடுத்துள்ளது. இந்தியாவில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் ஆகிய இரண்டு தொற்று வகைகளின் பரவலும் அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஒமிக்ரான் பாதிப்பும் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது. 


இந்நிலையில் உலகநாடுகளை மேலும் அச்சுறுத்தும் விதமாக புதிய வகையான மற்றொரு கொரோனா வைரஸ் வகை பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சைப்ரஸ் நாட்டின் ஆராய்ச்சியாளர் லியான்டியோஸ் கோஸ்டிரிக்ஸ் தெரிவித்துள்ளார். அதாவது சைப்ரஸ் நாட்டில் தற்போது டெல்டா மற்றும் ஒமிக்ரைன் வகைகள் சேர்ந்த கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க:”கொரோனா பரவக்கூடாதுல்ல” : மகனை இந்த நிலைமையில் வைத்த தாய்... பாய்ந்த காவல்துறை நடவடிக்கை


இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த போது, ”சைப்ரஸ் நாட்டில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வகை தொற்று சேர்ந்து புதிய வகையாக மாறி மக்களை பாதிக்க தொடங்கியுள்ளது. இந்த வகை தொற்றுக்கு டெல்டாக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வகை தொற்றில் டெல்டா மரபணுக்கள் ஒமிக்ரான் மரபணுக்கள் போல் உருமாறியுள்ளன. இந்த தொற்று பாதிப்பு தற்போது வரை 25 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது. 




இது கொரோனா சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது அதிகமாக பரவியுள்ளது. எனினும் இது ஆரம்ப நிலை என்பதால் இதன் பரவும் வீரியம் ஆகியவை குறித்து தெளிவாக தெரியவில்லை. இது டெல்டா, ஒமிக்ரான் தொற்றுகளைவிட ஆபத்தானதா என்பதையும் பின்னர் ஆராய்ந்து பார்த்து தான் கூறமுடியும். என்னுடைய சொந்த கணிப்பின் படி ஒமிக்ரான் பாதிப்பைவிட இது அதிகமாக இருக்காது என்று நம்புகிறேன். இருப்பினும் இது தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்த பிறகுதான் உறுதியான கருத்தை கூறமுடியும்” எனத் தெரிவித்துள்ளார்.


 ஏற்கெனவே பல நாடுகள் ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக தங்களுடைய நாட்டில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த தொடங்கியுள்ளன. இந்தச் சூழலில் இந்த புதிய வகை பாதிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நாளை முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சுகாதாரம் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க:நம்மூர் டவுன் பஸ் தேவலை... பறவை மோதி பஞ்சு பஞ்சாய் போன விமானம்; சிதறி ஓடிய பயணிகள்!