அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரத்தில் பெண் ஒருவர் தன் 13 வயது மகனைக் காரின் பின்பக்கத்தில் வைத்து அடைத்ததற்காகத் தற்போது குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தன் மகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால் தொற்று பரவக்கூடாது என்று இவ்வாறு செய்ததாக அவர் கூறியுள்ளார். 


41 வயதான சாரா பீம் என்ற இந்தப் பெண் கடந்த ஜனவரி 3 அன்று அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள கோவிட் பரிசோதனை மையத்திற்குத் தன் மகனைக் காரில் பின்பக்கத்தில் அடைத்து அழைத்துச் சென்றுள்ளார். 


கென் ப்ர்டிஜ்டன் அரங்கத்திற்குச் சென்ற சாரா பீமின் காரில் இருந்து தொடர்ந்து சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததாகக் கூறப்படுகிறது. கோவிட் பரிசோதனை மையத்தின் சுகாதாரத்துறை இயக்குநர் பெவின் கார்டன் சாரா பீமின் காரைத் திறக்க உத்தரவிட்டதையடுத்து, அவர் அதனைத் திறக்கும் போது, அவரது 13 வயது மகன் காரின் உள்ளே அடைத்து வைக்கப்பட்டிருந்தது அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 



சாரா பீம்


 


கடந்த 2011ஆம் ஆண்டு முதல் சைப்ரெஸ் ஃபேர்பேங்க்ஸ் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் சாரா பீம், தன் மகனைத் தனிமைப்படுத்தும் விதமாகவே காரில் வைத்து அடைத்ததாகத் தன் தரப்பில் இருந்து கூறியுள்ளார். 


`தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத் தன் மகனைக் காரின் பின்பக்கத்தில் வைத்து அடைத்ததாகத் தாய் கூறுகிறார்’ என்று வழக்கின் விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதல் பரிசோதனைக்காக கோவிட் பரிசோதனை மையத்திற்கு சாரா பீம் வந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பெவின் கார்டன் சாரா பீமிடம் அவரது மகன் காரின் பின்பக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, பின் இருக்கையில் அமராத வரை இருவரும் பரிசோதனை செய்யப்பட மாட்டார்கள் எனக் கறாராகத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 


பள்ளி வளாகம் ஒன்றில் பரிசோதனை மையம் செயல்பட்டு வந்ததால், பள்ளியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் சிறுவன் துன்புறுத்தப்படவில்லை என அவர்கள் விசாரித்த பிறகு தெரிவித்துள்ளனர். 



பரிசோதனை மையத்தில் இருந்து சிசிடிவி வீடியோ பதிவுகளில் சாரா பீம் காரின் பின்பக்கத்தைத் திறப்பதும், அவரது மகன் அதில் இருந்து வெளியில் வருவதும் பதிவாகியுள்ளதால், இது குற்ற வழக்கில் ஆதாரமாகக் கருதப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 


குழந்தைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் குற்றத்தின் கீழ், சாரா பீம் மீது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சைப்ரெஸ் ஃபேர்பேங்க்ஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 


சைப்ரெஸ் ஃபேர்பேங்க்ஸ் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் சாரா பீம் தற்போது நிர்வாக ரீதியான விடுமுறையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் டெக்ஸாஸ் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.