தென்னாப்பிரிக்காவில் விமானம் ஒன்று தரையிறங்கும் போது, பறவைகளின் தாக்குதலை எதிர்கொண்டதால் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. எனினும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தின் போது யாரும் பாதிக்கப்படவில்லை. சுமார் 26 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த Jetstream 41 ரக விமானம் ஒன்றின் மீது பறவைகள் மோதியதில் விமானத்தின் ப்ரொபெல்லர் உடைந்து, விமானத்திற்குள் நுழைந்தது. எனினும் விமானத்தினுள் யாரும் இல்லாததால் உயிர்களுக்கு எந்தப் பாதிப்பு ஏற்படவில்லை.
விமானத்திற்குள் ப்ரொபெல்லரின் பிளேட் பகுதி நுழைந்து, அந்தப் பகுதியில் உள்ளவற்றைக் கிழித்துள்ளது. MT-Propeller என்று அழைக்கப்படும் இது ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
சுமார் 29 பேர் பயணிக்கக்கூடிய இந்த விமானம் முழுவதும் எகானமி வகுப்புக்காக பயணங்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்துள்ளன. பிற விமானங்களோடு ஒப்பிடுகையில் MT Propeller பயன்படுத்தப்படும் விமானங்கள் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.
இந்த விபத்து குறித்து செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது ஏர்லிங்க் நிறுவனம். அதில், `ஏர்லிங்க் ஜெட்ஸ்ட்ரீம் 41 விமானம் தென்னாப்பிரிக்காவின் வெனிசியா விமான நிலையத்தில் தனியாருக்காகப் பயணம் மேற்கொண்டு தரையிறங்கும் போது பெரிய பறவை ஒன்றின் மீது மோதியது. விமானம் கடுமையாக சேதமடைந்திருந்த போதும், பயணிகளுக்கோ, விமானிகளுக்கோ எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. விமானத்துறையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, இந்த விவகாரம் தொடர்பாக தென்னாப்பிரிக்காவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் கூறப்பட்டு, இதன் மீது விசாரணை நடத்தப்படவுள்ளது. இதற்கான வெனிசியா விமான நிலையத்தில் சேதமடைந்த விமானம் நிறுத்தப்பட்டுள்ளது’ எனக் கூறியுள்ளது ஏர்லிங்க் நிறுவனம்.
இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச அளவில் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.