பீப்பிள் மேகசினின் இவ்வருடத்தின் "வாழும் கவர்ச்சியான மனிதர்" என்ற பட்டத்தை கேப்டன் அமெரிக்கா நடிகரான கிறிஸ் எவன்ஸ் பெற்றுள்ளார். கடந்த வருடம் மார்வெல்லில் அவருடன் இணைந்து நடித்த பால் ரூட் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


பட்டம் குறித்து எவான்ஸ்


 41 வயதாகும் கிறிஸ், "இந்தப் பட்டம் ஒரு வித்தியாசமான வஞ்சப்புகழ்ச்சி போல் இருக்கிறது" என்றார். இருப்பினும், அவர் தனது மிகப்பெரிய ரசிகரான அவரது அம்மாவுடன் செய்தியைப் பகிர்ந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாக கூறினார். அவர் பேசுகையில், "இதனால், என் அம்மா மிகவும் மகிழ்ச்சியடைவார். நான் செய்யும் எல்லாவற்றிலும் அவர்தான் பெருமை கொள்ளும் முதல் ஆளாக இருக்கிறார்", என்றார். 


எவன்ஸ் 2000-ஆம் ஆண்டில் தனது முதல் தொலைக்காட்சித் தொடரில் ஒன்றான ஆப்போசிட் செக்ஸில் நடித்ததில் இருந்து 2019 இல் மார்வெல் திரைப்படமான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேமில் கேப்டன் அமெரிக்காவாக நடித்தது மற்றும் கிரே மென் வரை மக்கள் இடையே மிகவும் பரிச்சயமான முகமாக இருந்து வருகிறார். 



அடுத்த கட்ட நகர்வு


அவரது பல படங்கள் பெரும் வரவேற்புகளை பெற்றிருந்தாலும், தற்போது அவர் திரைப்படங்களை தாண்டி சில விஷயங்களில் கவனம் செலுத்தும் நிலையில் உள்ளார். அதாவது திருமணம் செய்யவும், தந்தையாகவும் திட்டங்களை வைத்திருக்கிறார். மேலும் பேசுகையில், "நாம் விரும்பும் சில விஷயங்கள், அல்லது எனது குடும்பத்தினர் மற்றும் எனது நண்பர்கள் விரும்பும் சில விஷயங்களை செய்ய வேண்டிய இடத்தில் உள்ளேன்", என்றார்.


தொடர்புடைய செய்திகள்: EPS Speech : "ஜெயலலிதா மீது லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சித்தனர்.." எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு..!


திருமணத் திட்டம்


மேலும் பேசிய அவர், "இப்போது எனது சினிமா வாழ்க்கையின் மிகவும் மகிழ்ச்சிகரமான அம்சம் என்னவென்றால் எனக்கான நேரத்தை எடுத்துக்கொண்டு வேலைகளை முடித்துவிட்டு மீண்டும் வந்தாலும் அதே வரவேற்பு கிடைக்கும் அளவுக்கு சுதந்திரம் உள்ளதாக உணர்கிறேன்", என்றார். 






அவரது சொந்த நகரத்தைப் பற்றி..


தன்னை பற்றி குறிப்பிடும் ஒரு தலைப்பில் கவர்ச்சி என்னும் வார்த்தை வருவதில் அவருக்கு சங்கடம் இருந்தாலும், பாஸ்டனை சேர்ந்த இந்த நடிகர் அவரது சொந்த நகரத்தை கவர்ச்சிகரமாக மாற்றுவதில் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார் என்பதை மறைக்க விரும்பவில்லையாம்.


"இந்த நகரத்தில் எவ்வளவு வரலாறு உள்ளது! எனக்கு இந்த பேச்சு வழக்கு மிகவும் பிடிக்கும். சொல்லப்போனால் அந்த பேச்சு வழகுதான் என் வீடு. அந்த நகரத்தின் வானிலையை மிகவும் விரும்புகிறேன். பருவங்கள், விளையாட்டு அணிகள் எல்லாவற்றையும் நான் கொண்டாடுகிறேன். ஆனால் பாஸ்டனைப் பற்றிய முக்கியமான விஷயம் பல்கலைக்கழகங்கள். எங்களிடம் நிறைய நல்ல கல்விப் பயிலிடங்கள் உள்ளன. கல்விக்கு எப்போதுமே இங்கு ஒரு முக்கியத்துவம் உண்டு," என்றார்.


கிறிஸ் எவன்ஸ் தனது புதிய பட்டமான கவர்ச்சி என்னும் வார்த்தைக்கு பழகிக்கொண்டிருக்கும் இன்னொன்றையும் சொல்கிறார்.  "வயதானவராகவும், தொய்வுற்றவராகவும்" மாறும்போது, இப்போது கொடுக்கப்பட்டுள்ள இந்த மரியாதையை அன்புடன் திரும்பிப் பார்ப்பேன். எப்போதும் பேசுபொருளாக இருந்து வருவது எனது அதிர்ஷ்டம்", என்று கூறினார்.