கடும் வெப்பத்தின் காரணமாக, 2022-ல் ஆண்டு இதுவரை குறைந்தது 15,000 ஐரோப்பியர்கள் இறந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு அறிக்கை:
2022 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்ற மாநாடு, எகிப்தில் நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில், பூமியின் வெப்பநிலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஐரோப்பாவுக்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குனர் டாக்டர் ஹான்ஸ் ஹென்றி க்ளூஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கடும் வெப்பத்தின் காரணமாக, 2022-ல் இதுவரை, அதாவது 10 மாதங்களில் குறைந்தது 15,000 ஐரோப்பியர்கள் இறந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவையின் தெரிவிக்கையில், கடந்த கோடைகாலம் வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஐரோப்பாவானது, வெப்பமானதாக இருந்தது என்றும், அதே போல் அதிக எண்ணிக்கையிலான இறப்புக்களும் ஏற்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்பு:
"இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட நாட்டின் தரவுகளின் அடிப்படையில், 2022 ஆம் ஆண்டில் வெப்பத்தால் குறைந்தது 15,000 பேர் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில், ஸ்பெயினில் கிட்டத்தட்ட 4,000 இறப்புகளும், போர்ச்சுகலில் 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகளும், இங்கிலாந்தில் 3,200 க்கும் மேற்பட்ட இறப்புகளும், ஜெர்மனியில் சுமார் 4,500 இறப்புகளும் கோடையின் 3 மாதங்களில் சுகாதார அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டன.
பிரான்சின் தேசிய புள்ளியியல் மற்றும் பொருளாதார ஆய்வுகள் நிறுவனம் (ஐ.என்.எஸ்.இ.இ) தெரிவிக்கையில், கோவிட் -19 தொற்றுநோய்க்கு முந்தைய கடைசி ஆண்டுடன் ஒப்பிடும்போது 2022 ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 22 வரை 11,000 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்ததாக தெரிவித்துள்ளது.
1961 முதல் 2021 வரை, ஐரோப்பா தீவிர வெப்பநிலை காரணமாக மொத்தம் 150,000 மக்களை இழந்தது. 2022 ஆம் ஆண்டின் கோடையில், வெப்பம் காரணமாக மட்டுமே இந்த பிராந்தியம் பத்தில் ஒரு பங்கை இழந்துள்ளது. இந்த அறிக்கையானது, ஐரோப்பிய அரசாங்கங்கள் வரவிருக்கும் மோசமான ஆண்டுகளுக்கு தங்கள் சுகாதார முறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் பருவ நிலை மாற்ற தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறும், குறுகிய காலத்தில், கடுமையான கோடை வெப்பத்தை நிவர்த்தி செய்வதற்கான சுகாதாரத் திட்டங்களைக் கடைப்பிடிக்குமாறும் உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குனர் டாக்டர் ஹான்ஸ் கேட்டு கொண்டுள்ளார்.