ஆணுக்கு நிகர் பெண் என்பதை காலங்காலமாக சொல்லி வருகிறோம். ஆனால், உண்மையிலேயே ஆணுக்கு நிகராக பெண்கள் போற்றப்படுகிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பெயரளவிற்கும் அலங்கார வார்த்தைக்காகவுமே சொல்லப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை.
சர்ச்சையை கிளப்பிய சீன நிறுவனம்:
சமீபத்தில் கூட வெளியான ஒரு ஆய்வில், 10-ல் 9 ஆண்கள் பெண்களுக்கு எதிராக ஏதேனும் ஒருவகையிலான பாலின பாகுபாட்டை காட்டுகின்றனர் என்பது தெரியவந்தது. உலகளவில் ஒட்டுமொத்தமாக ஆண், பெண் முழு சமநிலையை அடைய 131 ஆண்டுகள் ஆகும் என்று தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், சீன நிறுவனம் ஒன்று, ஆண் ஊழியர்களை ஊக்குவிப்பதற்காக பெண் ஊழியர்கள் மேக்கப் போட்டு கொள்ள வேண்டும் என்றும் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தென்கிழக்கு சீனாவின் ஷென்சென் நகரை தளமாகக் கொண்ட சீன நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 300 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், பெரும்பான்மையானவர்கள் ஆண்களாக உள்ளனர். இந்த நிறுவனத்தில் லுவோ என்பவர் நிர்வாக அதிகாரியாக உள்ளார்.
"மேக்கப் போட்டு கொண்டு வாருங்கள்”
இவர் அலுவலக குழுவினர் சக ஊழியர்களிடம் சாட் செய்து கொண்டிருந்தார். அந்த குழுவில் ஐந்து பெண் ஊழியர்களும் இருந்துள்ளனர். அந்த நேரத்தில், நிர்வாக அதிகாரியான லுவோ, "பெண்கள் அலுவலகத்திற்கு வரும்போது அழகுசாதன பொருட்களை அணிய வேண்டும். அதாவது, ஆண் ஊழியர்களை ஊக்குவிப்பதற்காக மேக்கப் போட்டுக் கொண்டு அலுவகத்திற்கு வர வேண்டும்" என்றார்.
”மேக்கப் போட்டுக் கொண்டு ஆண் ஊழியர்களை ஊக்குவித்தால், அவர்கள் வெகுமதியாக தேநீர் வாங்கி கொடுப்பார்கள்" என்று கூறியதாக தெரிகிறது. இதனை அந்த குரூபில் இருந்த ஒருவர் இணையத்தில் பகிர்ந்ததை அடுத்து, வைரலானது. இதற்கு பதலளித்த நிர்வாக அதிகாரி, நகைச்சுவைக்காக சொன்னதாக அவர் கூறினார். மேலும், பெண் ஊழியர்களுக்காக எங்கள் நிறுவனம் பல்வேறு நன்மைகளை செய்து வருகிறது என்றும் கூறினார். இருப்பினும், சீன நிறுவனத்தின் அதிகாரி கூறிய இந்த கருத்துகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். ”பெண் ஊழியர்களை இப்படி தான் நடத்துவதா? இதை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று ஒருவர் இணையத்தில் பதிவிட்டிருந்தார். ”அணியை ஊக்குவிக்கும் வகையில் உடற்பயிற்சி செய்ய ஆண் ஊழியர்களை அவர் ஏன் கேட்கவில்லை?" என்று மற்றொருவர் இணையத்தில் பதிவிட்டிருந்தார்.
மேலும் படிக்க
Sonia Gandhi: ராமர் கோயில் திறப்பு விழா.. காங்கிரஸ் எடுத்த நிலைபாடு.. சோனியா காந்தி அதிர்ச்சி முடிவு