Putin Wishes Modi: 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்தியாவில் உள்ள நண்பர்களுக்கு வாழ்த்துகள் என, ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.


ஜெய்சங்கர் ரஷ்யா பயணம்:


உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் ஓராண்டையும் கடந்து நீடித்து வருகிறது. போர் நிறுத்தம் வேண்டும் என, பிரதமர் மோடியும் ரஷ்ய அதிபர் புதினுடன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தொலைபேசி வாயிலாக பேசினாலும், தனிப்பட்ட சந்திப்பது என்பது நிகழாமலேயே உள்ளது.  இந்நிலையில் தான், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார்.அங்கு அநாட்டின் முக்கிய தலைவர்கள் பலரையும் சந்தித்து ஆலோசித்து வருகிறார்.  இருதரப்பு வர்த்தகத்தை 50 பில்லியன் டாலர்களுக்கு மேல் கொண்டு செல்வதற்கான வழிகள் குறித்து விவாதித்தது குறிப்பிடத்தக்கது. இந்த பயணம் இருநாட்டு உறவில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த பயணத்தின் விளைவாக விரைவில் பிரதமர் மோடியும் ரஷ்யா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


செய்சங்கர் செய்தியாளர் சந்திப்பு:


ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் உடனான ஆலோசனைக்குப் பிறகு ஜெய்சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இரு தலைவர்களும் தொடர்ந்து தொடர்பில் இருக்க, பிரதமர் மோடியும் அதிபர் புதினும் அடுத்த ஆண்டு வருடாந்திர உச்சிமாநாட்டில் சந்திப்பார்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.


மோடியை சந்தித்தால் மகிழ்ச்சி - புதின்:


அதைதொடர்ந்து புதின் கூறியதாக பல்வேறு கருத்துகளையும் ஜெய்சங்கர் தெரிவித்தார். அதன்படி, “எங்கள் நண்பர் பிரதமர் மோடியை ரஷ்யாவில் பார்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். பிரதமர் மோடியின் நிலைப்பாடு எங்களுக்குத் தெரியும், இதைப் பற்றி ஒன்றுக்கு மேற்பட்ட முறை பேசியுள்ளோம். அவரது நிலைப்பாடு, ஹாட் ஸ்பாட்கள் உள்ளிட்ட சிக்கலான செயல்முறைகள் குறித்த அவரது அணுகுமுறை, உக்ரைனின் நிலைமை குறித்து நான் பலமுறை அவருக்குத் தெரிவித்துள்ளேன். இந்த பிரச்னையை அமைதியான வழிகளில் தீர்க்க அவர் பாடுபடுவதை நான் அறிவேன். 


நண்பர்களுக்கு வாழ்த்துகள் - புதின்:


அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் ரஷ்யாவில் அவருக்காக காத்திருக்கிறோம் என்பதை அவரிடம் சொல்லுங்கள். அடுத்த ஆண்டு இந்தியாவில் பிஸியான அரசியல் அட்டவணை இருக்கும் என்று எனக்குத் தெரியும் (2024 ஐக் குறிப்பிடுகிறது லோக்சபா தேர்தல்). இந்தியாவில் உள்ள எங்கள் நண்பர்களுக்கு நாங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறோம். அரசியல் சக்திகளின் எந்த நிலைப்பாட்டிலும் எங்களது பாரம்பரிய நட்புறவைப் பேணுவோம் என்று நாங்கள் நம்புகிறோம்” என ரஷ்ய அதிபர் கூறியதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.


நடைபெறுமா இந்தியா - ரஷ்யா உச்சி மாநாடு:


இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான 'இந்தியா-ரஷ்யா மூலோபாய கூட்டாண்மை குறித்த பிரகடனம்' 2000வது ஆண்டு கையொப்பமானது. அது முதல் முதல் இரு நாட்டு தலைவர்களுக்கு இடையேயான ஆண்டு உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இந்நிலையில், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக நடைபெறாத இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டை நடத்துவதற்கான தேதியை இரு தரப்பிலும் இன்னும் இறுதி செய்ய முடியவில்லை. கடைசியாக கடந்த 2021 டிசம்பரில் உச்சிமாநாட்டு அளவிலான கூட்டம் நடைபெற்றது.