வங்கதேச நாட்டில் ரயில் போக்குவரத்தை நம்பியே அந்த நாட்டு மக்கள் பெரும்பாலும் உள்ளனர். இந்த நிலையில், அந்த நாட்டில் சரக்கு ரயில் ஒன்றுடன் பயணிகள் ரயில் மோதியதில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோர ரயில் விபத்து:
வங்கதேச நாட்டின் தலைநகர் டாகா ஆகும். டாகாவில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பைரப். இங்குள்ள ரயில் வழித்தடத்தில் கோதுலி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, சட்டோக்ரம் நோக்கி சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக பயணிகள் ரயில் சரக்கு ரயில் மீது மோதியது.
இதில், பயணிகள் ரயிலின் சில பெட்டிகளும், சரக்கு ரயிலின் சில பெட்டிகளும் தடம்புரண்டது. குறிப்பாக பயணிகள் ரயிலின் சில பெட்டிகள் மிக மோசமாக சேதம் அடைந்துள்ளது. சில பெட்டிகள் அப்பளம் போல நொறுங்கியுள்ளது. அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பார்ப்போர் மனதை ரணமாக்குகிறது. இந்த கோர விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். பல பயணிகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த போலீசாரும், மீட்பு படையினரும் விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்:
இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று பைரப் நிர்வாக அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதுவரை காயம் அடைந்த 100க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் உள்ளூர் மக்களும் அதிகாரிகளுக்கு உதவி செய்து வருகின்றனர்.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த விபத்திற்கான காரணம் என்னவென்று? அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோர விபத்தில் 15 பயணிகள் உயிரிழந்திருப்பது வங்கதேச மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: காசாவில் இருளில் மூழ்கப்போகும் மருத்துவமனைகள் - கர்ப்பிணிகள், குழந்தைகள் உயிருக்கு அபாயம்
மேலும் படிக்க: Israel - Hamas War: 266 பேர் பலி- ஹமாஸ் படைக்கு அமெரிக்கா எச்சரிக்கை? உலக தலைவர்கள் இஸ்ரேல் வருகை