அண்டார்டிக் கடல் பனி ஆறு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக குறைந்த அளவை எட்டியுள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


இது அச்சுறுத்தும் நிலையை எட்டியுள்ளதாக கூறுகின்றனர். 40 ஆண்டுகளாக  செயற்கைக்கோள் கண்காணிப்புகளில், கடந்த வாரத்தில் இருந்ததை விட அண்டார்டிகா சுற்றி பனி இந்த அளவிற்கு குறைவாக இருந்ததில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  2022 ஆம் ஆண்டில், கடல் பனியின் அளவு 1.92 மீ சதுர கி.மீ ஆகக் குறைந்தது என அறிக்கை மூலம் கூறப்பட்டது. 1979 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட செயற்கைக்கோள் கண்காணிப்புகளின் அடிப்படையில் இது எப்போதும் இல்லாத அளவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி பனியின் அளவு மேலும் குறைந்து 1.79 மீ சதுர கிமீ ஆக குறைந்துள்ளது. சுமார் 1,36,000 சதுர கிமீ அதாவது டாஸ்மேனியாவின் அளவை விட இரண்டு மடங்கு அதிகமாகும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.


ஆஸ்திரேலிய அண்டார்டிக் திட்ட கூட்டாண்மையுடன் டாஸ்மேனியா பல்கலைக்கழகத்தில் உள்ள அண்டார்டிக் கடல் பனி நிபுணர் டாக்டர் வில் ஹோப்ஸ் கூறுகையில், ”மேற்கு கண்டத்தில் உள்ள பெரிய பகுதிகள் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து இன்னும் மீளவில்லை. கடல் பனி மிகவும் பிரதிபலிப்பதால், சூரிய ஒளியால் உருகுவது கடினம். ஆனால் பனியின் அருகில் அதிக நீர் இருந்தால், அது அடியில் இருந்து பனியை உருகச் செய்யும்" என கூறினார். அண்டார்டிகாவில் பனி உருகினால் கடல் மட்டம் பல மீட்டர் உயரும் அபாயம் உள்ளது. கடல் பனி உருகுவதற்கும் கடல் மட்ட உயர்வுக்கும் மறைமுக தொடர்பு உள்ளது. கடலோரத்தில் இருக்கும் பனியில் புயல்களின் தாக்கத்தை தடுக்க கடல் பனி உதவுகிறது. நீண்ட காலத்திற்கு பனி இல்லாமல் போனால், கடலின் அலைகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்படும்.  


மேற்கு அண்டார்டிகாவில் உள்ள அமுண்ட்சென் மற்றும் பெல்லிங்ஹவுசென் கடலைச் சுற்றியுள்ள பனியின் அளவு தொடர்ந்து குறைந்து வருவதால், இது கவலைக்குரிய விஷயமாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். கண்டத்தைச் சுற்றியுள்ள கடல் பனியின் சராசரி அளவு 2014 வரை பாதிப்பு ஏற்படாத போதும், இந்த இரண்டு கடல் பகுதிகளில்  பாதிப்புகள் ஏற்பட்டன. இப்பகுதி த்வைட்ஸ் பனிப்பாறையின் தாயகமாக உள்ளது - இது "டூம்ஸ்டே பனிப்பாறை" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இந்த பனிப்பாறை உருகினால் கடல் மட்டம் சுமார் அரை மீட்டர் அளவு உயரும் என தெரிவித்துள்ளனர்.


 நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் ஆய்வாளரும் காலநிலை விஞ்ஞானியுமான பேராசிரியர் மாட் இங்கிலாந்து, “கடல் பனியின் குறிப்பிடத்தக்க வெப்பமயமாதல் மற்றும் உருகும் தன்மையை நாம் அண்டார்டிகாவில் காணத் தொடங்குகிறோம். இது இந்த நிலைகளுக்கு வருவதைப் பார்ப்பது நிச்சயமாக கவலை அளிக்கிறது”, எனக் கூறியுள்ளார்.  அண்டார்டிக் விஞ்ஞானிகள், கடல் பனி இந்த அளவிற்கு உருக என்ன காரணம் என்பதை ஆய்வு செய்து வருகின்றனர். இது போன்ற  நடவடிக்கைகள் இயற்கையான நிகழ்வா அல்லது காலநிலை நெருக்கடி அண்டார்டிகாவில் தென்படுவதற்கான அறிகுறிகளா என்ற அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.   


Philippines: பிலிப்பைன்ஸில் தொடரும் தாக்குதல்... நீக்ரோஸ் ஓரியண்டல் மாகாண ஆளுநர் சுட்டுக்கொலை