இந்தியா சமீபத்தில் 'ஆபரேஷன் தோஸ்த்' என்ற பெயரில், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி நாட்டிற்கு உதவுவதற்காக டன் கணக்கில் மருத்துவ உதவி மற்றும் பணியாளர்களை அனுப்பிய பிறகும், ஜம்மு & காஷ்மீர் பிரச்சினையை, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் (OIC), துருக்கி கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
நிராகரித்த இந்தியா
ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் செய்தியின்படி, மனித உரிமைகள் கவுன்சிலின் 52வது அமர்வின் உயர்மட்டப் பிரிவில் பதில் அளிக்கும் உரிமையைப் பயன்படுத்தி, ஜெனீவாவில் உள்ள இந்திய நிரந்தர தூதரகத்தின் முதல் செயலாளர் சீமா பூஜானி, துருக்கி மற்றும் OIC பிரதிநிதியின் அறிக்கை குறிப்பை முற்றிலும் நிராகரித்ததாக தெரிகிறது. இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறியுள்ளார்.
உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம்
"OIC அறிக்கையைப் பொறுத்தவரை, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் பற்றிய தேவையற்ற குறிப்புகளை நாங்கள் நிராகரிக்கிறோம்," என்று பூஜானி ஒரு அறிக்கையில் தெரிவித்தார். இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்காக மேற்கொள்ளும் முயற்சி முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என ஜித்தாவை தளமாகக் கொண்ட OICயை இந்தியா முன்பு விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
OIC நம்பகத்தன்மையை இழந்துவிட்டது
வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பிரச்சினைகளில் அப்பட்டமான வகுப்புவாதம், பக்கச்சார்பு மற்றும் தவறான அணுகுமுறையை மேற்கொள்வதன் மூலம் OIC ஏற்கனவே அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என்றார். பூகம்பத்தின் பாதிப்பில் இருந்து மீள இந்தியா செய்த உதவியை அதற்குள் மறந்துவிட்டதா துருக்கி என்ற கேள்வியையும் பலர் எழுப்புகின்றனர்.
துருக்கி பூகம்பம்
துருக்கியில் பயங்கரமான பூகம்பம் ஏற்பட்ட நிலையில், அதிலிருந்து மீள இந்தியா பெருமளவில் உதவி வருவது குறிப்பிடத்தக்கது. இடிபாடுகளைத் தோண்டி உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிக்க இந்தியா முதலில் உதவி செய்தது. அத்துடன் இந்தியா மருத்துவப் பொருட்கள், மருத்துவர்கள் மற்றும் தேடல் மற்றும் மீட்புக் குழுக்களையும் துருக்கிக்கு அனுப்பி பெரும் உதவியை செய்திருந்தது. துருக்கிக்கு மட்டுமில்லாமல், சிரியாவுக்கும் இந்திய விமானப்படையின் சி-130ஜே விமானத்தில் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பியது. NDRF இன் தன்னார்வக் குழுக்கள், சிறப்புப் பயிற்சி பெற்ற பணியாளர்கள், ராம்போ மற்றும் அவர்களது தோழமையான நாய்ப் படை, சிறப்பு வாகனங்கள் மற்றும் பல பொருட்கள் துருக்கிக்கு அனுப்பப்பட்டன. மேலும், இந்திய ராணுவத்தின் 30 படுக்கைகள் கொண்ட நடமாடும் மருத்துவமனை அமைப்பதற்கான பணியாளர்கள் மற்றும் உபகரணங்களும் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டன. ஆபரேஷன் தியேட்டர் மற்றும் எக்ஸ்ரே மற்றும் வென்டிலேட்டர்கள் போன்ற வசதிகளும் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.