India - Canada Row: இந்தியாவில் உள்ள தனது நாட்டு மக்களுக்கு, கனடா அரசு புதிய பயண அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.


கனடா எச்சரிக்கை:


காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்ட விவகாரத்தில், அந்நாட்டிற்கும் இந்தியாவிற்குமான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இந்திய அரசாங்கத்தின் அறிவுறுத்தலின்படி, அங்கிருந்த தூதரக அதிகாரிகளில் 41 பேரை கனடா அரசு அண்மையில் திரும்பப் பெற்றது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள தனது குடிமக்களுக்கான பயண ஆலோசனையை கனடா அரசாங்கம் புதுப்பித்துள்ளது.  குறிப்பாக "கனடா எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், "மிரட்டல் அல்லது துன்புறுத்தல்" போன்ற சம்பவங்களுக்கு வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. 


”சண்டிகர், மும்பையில் உஷாராக இருங்கள்”


இதுதொடர்பான அறிக்கையில்,கனடாவுக்கும் இந்தியாவுக்குமான சமீபத்திய மோதலால், கனடாவுக்கு எதிராக போராட்டங்களுக்கான அழைப்பும் அவதூறும் வழக்கமான ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் அதிகரித்துள்ளன. இதனால், ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும் கனடாவுக்கு எதிரான போரட்டங்களும் நிகழலாம். கனடா மக்கள், மிரட்டல்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாகலாம். தலைநகரான டெல்லியில் கனடா மக்கள் தங்களை எங்கும் வெளிப்படுத்திக் கொள்ளாமலும், தனிப்பட்ட விவரங்களைப் புதியவர்களிடம் பகிராமலும் இருக்க வேண்டும்.


சிறிய குற்றங்கள் அங்கு வழக்கமானவை. பெரும்பாலான நகரங்களில் வெளிநாட்டவர்களையே குறி வைப்பார்கள். அதிகாரிகளைத் திரும்ப பெற்றதால், சண்டிகர், மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் நேரடி தூதரக சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அந்த நகரங்களில் வசிப்பவர்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். பொது போக்குவரத்து உட்பட நெரிசலான பகுதிகளைத் தவிர்க்கவும்.  ஏதேனும் உதவி தேவைப்பட்டால் டெல்லியில் உள்ள தூதரக ஆணையத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.” என கனடா அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


அதோடு, தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால், இந்தியர்களுக்கான விசா விண்ணப்பங்களை செயலாக்குவதில் மந்தநிலை ஏற்படும் எனவும் கனடா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த மாதம் இந்தியா வாழும் கனடா குடிமக்களுக்கு இதே போன்ற பயண அறிவுறுத்தலை அந்நாட்டு அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.


பிரச்னை என்ன?


காலிஸ்தான் ஆதரவாளரான நிஜ்ஜாரை கடந்த 2020ம் ஆண்டு இந்திய அரசு தீவிரவாதியாக அறிவித்தது. இந்நிலையில், கடந்த ஜூன் 18 அன்று பிரிட்டிஷ் கொலம்பியாவில் தனது நாட்டின் மண்ணில் காலிஸ்தானி தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய முகவர்களுக்கு "சாத்தியமான" தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜாங்க ரிதியிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த குற்றச்சாட்டுகள் "அபத்தமானது" மற்றும் "உள்நோக்கம்" கொண்டது என இந்திய அரசு கடுமையாக எதிர்த்தது. தொடர்ந்து, இந்தியாவில் உள்ள கனடா தூதரகத்தின் மூத்த அதிகாரியையும் நாட்டில் இருந்து வெளியேற்றியது. மேலும், இரு நாடுகளும் பரஸ்பரம் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முனவைத்து வருகின்றன.