தன்பாலின திருமணத்தற்கு சட்ட அங்கீகாரம் கோரி தொடரப்பட்ட வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட், நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் ஒரே விதமான தீர்ப்பை வழங்கியுள்ளனர். எஸ். ரவீந்திர பட், பி. எஸ். நரசிம்மா, ஹிமா கோலி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.


"தன்பாலினத்தவர் திருமணத்துக்கு நீதிமன்றத்தால் அங்கீகாரம் வழங்க முடியாது"


திருமணம் செய்து கொள்ள மருவிய பாலினத்தவருக்கு (Queer) உரிமை உள்ளது; பால்புதுமை தம்பதிகள் உள்பட திருமணம் செய்து கொள்ளாத அனைத்து தம்பதிகளும் குழந்தையை தத்தெடுக்க உரிமை உள்ளது என சந்திரசூட் மற்றும் சஞ்சய் கிஷன் கவுல் தீர்ப்பு வழங்கியுள்ளனர். ஆனால், தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்காத சிறப்பு திருமண சட்டத்தை ரத்து செய்ய மறுத்துவிட்டனர்.


ஆனால், தன்பாலினத்தவர் திருமணத்துக்கு நீதிமன்றத்தால் அங்கீகாரம் வழங்க முடியாது என நீதிபதி ரவீந்திர பட் தெரிவித்துள்ளார். இதில் பல அம்சங்கள் கருத்தில் எடுத்து கொள்ள வேண்டியிருப்பதால் நாடாளுமன்றத்தால் மட்டும்தான் சட்ட அங்கீகாரம் வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "பால்புதுமை சமூகத்தவர் என்பவர்கள், நகரவாசிகளோ உயரடுக்கில் இருப்பவர்களோ மட்டும் அல்ல. இருப்பினும், தலைமை நீதிபதியின் கருத்துகளுடன் உடன்படவில்லை" என தெரிவித்துள்ளார். நீதிபதி நரசிம்மாவின் கருத்தை ஆராய்ந்ததில் நமக்குப் பலன் கிடைத்தது. நாங்கள் அவருடன் முழுமையாக உடன்படுகிறோம்.


மூன்று நீதிபதிகள் ஒரே மாதிரியான தீர்ப்பு:


திருமணம் என்பது சமூக கட்டமைப்பாக இருக்கிறது என்பதை இந்த நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. அரசுக்கு முன்பாகவே திருமணம் என்ற அமைப்பு இங்கு இருந்துள்ளது. அரசை பொருட்படுத்தாமல் திருமண அமைப்பு உள்ளது என்பதை இது குறிக்கிறது. திருமண விதிமுறைகள் அரசை சாராதவை, அதன் ஆதாரங்கள் வெளிப்புறமானவை.


சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க அரசிடம் நீதிமன்றம் கோரும் வழக்கு இதுவல்ல. சட்ட அங்கீகாரம் வழங்கப்படாத நிலையில், சமூகத்தில் அவர்கள் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரிக்க முடியாது. ஒரு அமைப்பை உருவாக்குவது அரசின் செயல்களை சார்ந்து உள்ளது. அதற்கு நீதிமன்றத்தின் மூலம் அழுத்தம் தர முயற்சி மேற்கொள்ள வேண்டும்.


உறவு கொள்வதற்கு உரிமை உள்ளது என்பதுடன் உடன்படுகிறோம். அது, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21இன் கீழ் வருகிறது என்பதை அங்கீகரிக்கிறோம். இணையரை தேர்வு செய்து கொள்வதற்கும் அவருடன் பாலியல் உறவு கொள்வதற்கு உரிமை உள்ளது. அடிப்படை உரிமையாக திருமணம் கருதப்படுகிறது. எனவே, அதை செய்து கொள்ள தகுதி இருக்க வேண்டியதில்லை" என்றார்.


நீதிபதி ரவீந்திர பட்டுடன் நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் பி. எஸ். நரசிம்மா ஆகியோர் உடன்பட்டு தீர்ப்பு வழங்கியுள்ளனர். மத்திய தத்தெடுப்பு ஆணையத்தின் விதிமுறைகள் செல்லும் என தீர்ப்பு வழங்கியுள்ளனர். மத்திய தத்தெடுப்பு விதிமுறைகளின்படி பால்புதுமையினர் மற்றும் திருமணம் செய்து கொள்ளாத தம்பதிகள், குழந்தைகளை தத்தெடுக்க முடியாது.