அமெரிக்காவின் மிச்சிகனில் வசிக்கும் ஒரு 13 வயது சிறுவன், தனது சிறு வயது சகோதரியை கடத்தி செல்ல வந்தவர்களை உண்டிகோலால் (கவண்) தாக்கி காப்பாற்றிய சம்பவம் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.
உண்டிகோலை வைத்து காப்பாற்றிய சிறுவன்
ஸ்கை செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, அல்பெனா டவுன்ஷிப்பில் நடந்த இந்த சம்பவம் மே 10 அன்று நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது. ஓவன் பர்ன்ஸ் என்ற சிறுவன் தனது எட்டு வயது சகோதரியின் அலறல் சத்தம் கேட்டதும் ஜன்னலில் இருந்து எட்டிப்பார்துள்ளார். அவரை கடத்தி செல்வது அந்த சிறுவனுக்கு புரிய வந்த போது, தனது உண்டிகோலை எடுத்து குறிவைத்து தாக்கியுள்ளார். 13 வயதான அந்த சிறுவன், நண்பர்களுடன் விளையாடும்போது எதாவது பிரச்சினை ஏற்பட்டிருக்கும் என்று முதலில் நினைத்துள்ளார், ஆனால் இரண்டாவது முறையாக அவரது அலறலைக் கேட்டவுடன் உடனடியாக உதவ விரைந்தார்.
நண்பர்களுடன் விளையாடுவதாக நினைத்தேன்
அந்த சிறுவன் இது குறித்து பேசும்போது, முதலில் நான் வீட்டுக்குள் இருக்கும்போது அவள் அலறும் சத்தம் கேட்டது, எனக்கு அவள் குரல் நன்றாக தெரியும். ஆனால் ஏதோ நண்பர்களோடு பிரச்சனையாக இருக்கும் என்று எண்ணி விட்டுவிட்டேன். பின்னர் மீண்டும் சத்தம் அதிகமாக கேட்டபோதுதான் நான் ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தேன். அப்போது எனது தங்கை ஒரு நபரால் கடத்தப்பட்டதைக் கண்டு, அதிர்ச்சி அடைந்ததோடு, மிகவும் கோபம் கொண்டேன்," என்று ஓவன் கூறியதாக ஸ்கை நியூஸ் மேற்கோளிட்டுள்ளது.
குண்டாக இருந்ததால் குறிவைக்க முடிந்தது
மேலும், "நான் என் ஸ்லிங்ஷாட்டை (உண்டிகோல்) எடுத்து ஜன்னலைத் திறந்தேன், அதில் வைத்து அடிக்க என்னிடம் பளிங்கு மற்றும் சிறிய கற்கள் போன்ற சில பொருட்கள் இருந்தன," என்று அவர் மேலும் கூறினார். ஓவனின் விரைவான சிந்தனை அவரது சகோதரியை காப்பாற்றியது என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் பேசிய ஓவன், "எனக்கு அதிர்ஷ்டம் என்னவென்றால், கடத்த வந்தவன், குண்டாக இருந்தான். ஏனென்றால் அவர் ஒல்லியாக இருந்திருந்தால் குறிவைத்து அடிக்க சிரமமாக இருந்திருக்கும்," என்று கூறினார்.
மேஜர் ஆனதும் விசாரணையை எதிர்கொள்வார்
அவரை கடத்த வந்த குற்றவாளி ஒரு 17 வயது ஆண் என்று தெரிய வந்துள்ளது. தலை மற்றும் மார்பில் அடிபட்டதில் காயங்கள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். "அவன் அவளுடைய வாயை மூடி இறுக்கி பிடித்துக்கொண்டு இருந்தான். என் தங்கை அவனை உதைத்து தப்பித்து சென்றால். ஆனாலும் பின்னர் அவன் அவளைப் பின்தொடர்ந்து ஓடிச்சென்று பிடிக்க முயற்சிதான்," என்று ஓவன் கூறியதாக ஏபிசி நியூஸ் மேற்கோளிட்டுள்ளது.
மேலும் உண்டிகோலால் சந்தேகத்திற்குரிய அந்த நபரை தலை மற்றும் மார்பில் "மூன்று முறை" அடித்ததாக அந்த சிறுவன் கூறினார். ஓவன் மற்றும் சிறுமியின் பெற்றோர் ஆண்ட்ரூ மற்றும் மார்கரெட் பர்ன்ஸ், இந்த சம்பவத்தை கேள்விபட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். கடத்த வந்த நபர் மைனர் என்பதால் பெயரை காவல்துறையினர் வெளியிடாத நிலையில், அவர் 18 வயதானதும் இந்த விசாரணையை எதிர்கொள்வார் என தெரிவித்துள்ளனர்.