உக்ரைன் விவகாரத்தை முன்வைத்து அமெரிக்காவில் நுழைய ரஷியா நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது. உக்ரைனுக்கு எதிராக போர் தொடுத்து வரும் ரஷிய நாட்டின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில் அமெரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
உக்ரைன் விவகாரம்:
அந்த வகையில், ரஷிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு அமெரிக்கா தடை விதித்து வருகிறது. தற்போது, இதற்கு பதிலடி தந்துள்ள ரஷியா, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்பட 500 அமெரிக்கர்கள் தங்கள் நாட்டில் நுழைய தடை விதித்துள்ளது.
இதுகுறித்து ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பைடன் அரசாங்கத்தால் தொடர்ந்து விதிக்கப்படும் ரஷிய எதிர்ப்புத் தடைகளுக்கு பதிலளிக்கும் விதமாக ரஷிய நாட்டுக்குள் நுழைய 500 அமெரிக்கர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரஷியா அதிரடி:
தடை செய்யப்பட்டவர்களில் ஒபாமாவும் ஒருவர். ரஷியா விரோத நடவடிக்கைகளுக்கு பதில் அளிக்கப்படாமல் இருக்காது என்பதை அமெரிக்க நீண்ட காலத்திற்கு முன்பே அறிந்திருக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க செனட் உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரஷிய விரோத போக்கையும் பொய் செய்திகளையும் பரப்பி வரும் நிறுவனங்கள், உக்ரைனுக்கு ஆயுதங்களை விநியோகம் செய்யும் நிறுவனங்களின் தலைவர்களுக்கு ரஷியா தடை விதித்துள்ளது.
தடை பட்டியலில் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் ஸ்டீபன் கோல்பர்ட், ஜிம்மி கிம்மல், சேத் மேயர்ஸ், சிஎன்என் செய்தி நிறுவனத்தின் தொகுப்பாளர் எரின் பர்னெட், எம்எஸ்என்பிசி தொகுப்பாளர்கள் ரேச்சல் மேடோ, ஜோ ஸ்கார்பரோ ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
பத்திரிகையாளர்களுக்கு விசா மறுப்பு:
கடந்த மார்ச் மாதம், உளவு பார்த்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்க பத்திரிகையாளர் இவான் கெர்ஷ்கோவிச்சுக்கு, அமெரிக்க தூதரகம் சார்பில் வழங்கப்படும் உதவியை வழங்க விடாமல் ரஷியா மறுத்துள்ளது.
இதற்கு பதிலடியாக, ஐநாவுக்கு ரஷியா வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் பயணம் மேற்கொள்ள உள்ள பத்திரிகையாளர்களுக்கு விசா வழங்க அமெரிக்க மறுத்துள்ளது.
புதினுக்கு பிடிவாரண்ட்:
உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சர்வதேச நீதிமன்றம் கடந்த மாதம் அதிரடி காட்டியிருந்தது. உக்ரைனில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து குழந்தைகளை சட்ட விரோதமாக தங்கள் நாட்டுக்கு குடிபெயர்ந்து அழைத்து சென்றது ரஷியா. இந்த போர் குற்றத்திற்கு புதினே பொறுப்பு என சர்வதேச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
கடந்த 15 மாதங்களாக, உக்ரைன், ரஷிய நாடுகளுக்கிடையே போர் நடந்து வருகிறது. இது உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தில், இந்தியா தொடர்ந்து நடுநிலை வகித்து வருகிறது.