கடந்த 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த நிலையில், கிட்டத்தட்ட 15 மாதங்களாக போர் தொடர்ந்து வருகிறது. போரின் நடுவே, பெரும்பாலான நகரங்களில் இருந்து ரஷியா, தங்களின் படைகளை திரும்பப்பெற்றது. சமீப காலமாகவே, போரில் ரஷியா பின்னடைவுகளை சந்தித்து வந்த நிலையில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் அந்நாடு மீண்டும் தாக்குதல் நடத்த தொடங்கியது.
உக்ரைன் போர்:
இந்நிலையில், போரின் மையப்பகுதியான கிழக்கு உக்ரைனின் பாக்முட் நகரை கைப்பற்றியதாக ரஷியா நேற்று அறிவித்தது. இதையடுத்து, ரஷிய படைகளுக்கும் தனியார் கூலிப்படை குழுவான வாக்னருக்கும் அந்நாட்டு அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாக்முட் நகரில் நிலைமை மோசமாக இருப்பதாக தெரிவித்த உக்ரைன், மோதல் தொடர்ந்து வருவதாக கூறியுள்ளது.
இச்சூழலில், நகரை கைப்பற்றிவிட்டதாக ரஷியா அறிவித்துள்ளது. ஜப்பானில் நடந்து வரும் ஜி7 உச்சி மாநாட்டில் உலக தலைவர்களுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்ட நிலையில், உக்ரைனின் முக்கிய நகரை ரஷியா கைப்பற்றியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
மீண்டும் திருப்பம்:
ஒரு காலத்தில் 70,000 மக்கள் தொகை கொண்ட உப்புச் சுரங்க நகரமான பக்முட், கடந்த 15 மாதங்களாக மோசமான போரை சந்தித்து வருகிறது. பக்முட்டில் ரஷியா, உக்ரைன் ஆகிய இரு தரப்பும் பெரும் இழப்பை சந்தித்ததாகக் கூறப்படுகிறது. தொடர் தோல்வியை சந்தித்து வரும் ரஷியாவுக்கு இந்த வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கடந்த பல மாதங்களாக எதிர் தாக்குதலுக்கு தயாராகி வரும் உக்ரைனுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பக்முட் நகர் வீழ்த்தப்பட்டுவிட்டால் டான்பாஸ் பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதியை ரஷியா கைப்பற்றிவிடும் என உக்ரைன் அதிபர் முன்னதாக எச்சரித்திருந்தார்.
உச்சக்கட்ட பரபரப்பு:
இதுகுறித்து ரஷியா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "வாக்னர் கூலிப்படை பிரிவின் தொடர் தாக்குதல் நடவடிக்கைகளின் விளைவாக, தெற்கு பிரிவின் பீரங்கி மற்றும் விமானத்தின் ஆதரவுடன், ஆர்டெமோவ்ஸ்க் (பாக்முட்) நகரை கைப்பற்றினோம். பாக்முட் நகரை கைப்பற்றியதற்காக வாக்னர் கூலிப்படை பிரிவினருக்கும் அவர்களுக்கு உதவியாக இருந்த ரஷிய ஆயுதப் படை படைவீரர்களுக்கும் ரஷியா அதிபர் வாழ்த்து தெரிவித்துள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைன் போரில் ரஷியா முக்கிய நகரை கைப்பற்றியிருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சர்வதேச நீதிமன்றம் கடந்த மாதம் அதிரடி காட்டியிருந்தது.
உக்ரைனில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து குழந்தைகளை சட்ட விரோதமாக தங்கள் நாட்டுக்கு குடிபெயர்ந்து அழைத்து சென்றது ரஷியா. இந்த போர் குற்றத்திற்கு புதினே பொறுப்பு என சர்வதேச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.