பாகிஸ்தானில் பிரதமர், ஜனாதிபதிக்கு கொடுக்கும் சம்பளத்தை விட உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு அதிக அளவில் சம்பளம் கொடுக்கப்படுவது தெரிய வந்துள்ளது. ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், அமைச்சரவை செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை விட உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு அதிக சம்பளம் அளிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் ஜனாதிபதி, பிரதமருக்கு இவ்வளவுதான் சம்பளமா..?
பொது கணக்கு குழுவிடம் சமர்பிக்கப்பட்ட அறிக்கையின் மூலம் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானிலேயே அதிக சம்பளம் பெறுவது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிதான். அதற்கு பிறகு, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது.
மூன்றாவதாக அதிக சம்பளம் பெறுபவராக இருப்பவர்தான் ஜனாதிபதி. இதில், இன்னொரு சுவாரசிய தகவல் என்னவென்றால் அமைச்சர்கள், மத்திய அமைச்சரவை செயலாளர்களை விட பிரதமர் குறைவாக சம்பளம் பெறுகிறார் என்பதுதான்.
பொது கணக்கு குழு தலைவர் நூர் கான், குழு உறுப்பினர்களுக்கு அளித்த தகவலில், "பாகிஸ்தான் ஜனாதிபதியின் சம்பளம் 8 லட்சத்து 96 ஆயிரத்து 550 (PKR) பாகிஸ்தான் ரூபாய். பிரதமருக்கு 2 லட்சத்து 1 ஆயிரத்து 574 பாகிஸ்தான் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சம்பள விவரம்:
அதே நேரத்தில், பாகிஸ்தான் தலைமை நீதிபதி, 15 லட்சத்து 27 ஆயிரத்து 399 பாகிஸ்தான் ரூபாயை சம்பளமாக பெறுகிறார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் 14 லட்சத்து 70 ஆயிரத்து 711 ஆகும். மத்திய அமைச்சர்கள் 3 லட்சத்து 38 ஆயிரத்து 125 பாகிஸ்தான் ரூபாயை பெறுகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினருக்கு 1 லட்சத்து 88 ஆயிரம் பாகிஸ்தான் ரூபாய் சம்பளமாக தரப்படுகிறது. கிரேட் 22 அதிகாரிக்கு 5 லட்சத்து 91 ஆயிரத்து 475 பாகிஸ்தான் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஜனாதிபதி, பிரதமர், தலைமை நீதிபதி, பிற உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சலுகைகள் குறித்த விவரங்களை பொதுக் கணக்கு குழு கேட்டிருந்தது. இந்த விவகாரத்தில் நேரில் ஆஜராகும்படி பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு குழு சம்மன் அனுப்பியிருந்தது.
உச்ச நீதிமன்றத்தின் 10 ஆண்டுகளுக்கு மேலான செலவுகள் அடங்கிய விவரங்களை கேட்டு பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றப் பதிவாளருக்கு பொது கணக்கு குழு சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், கடந்த செவ்வாய்கிழமை நடந்த கூட்டத்தில் பதிவாளர் ஆஜராகவில்லை. இதையடுத்து, அடுத்த செவ்வாய்கிழமை நடைபெற உள்ள கூட்டத்தில் நேரில் ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என பொதுக் கணக்கு குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. அப்போது பேசிய குழவின் தலைவர் நூர் கான், "பாகிஸ்தானின் நாடாளுமன்றம், தேர்தல் ஆணையம் மற்றும் பிற நிறுவனங்கள் இந்தக் குழுவிற்கு அவர்களின் அனைத்து செலவு கணக்குகளையும் சமர்பிக்க வேண்டும். இப்படியிருக்கையில், பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றம் ஏன் சமர்பிக்கக் கூடாது" என்று கேள்விகளை எழுப்பினர்.