லார்கானாவைச் சேர்ந்த ஒரு 9 பேர் கொண்ட பாகிஸ்தானிய குடும்பத்தில், எல்லோருக்குமே ஒரே தேதியில் பிறந்தநாள் வரும் நிலையில், அந்த குடும்பம் கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.
9 பேருக்கு ஒரே பிறந்தநாள்
ஒன்பது பேர் கொண்ட இந்த குடும்பத்தில் அனைவருமே ஒரே நாளில் பிறந்தநாள் மெழுகுவர்த்திகளை ஊதி அனைக்கின்றனார். அந்த நாள் ஆகஸ்ட் 1. இதன் மூலம், இந்த குடும்பம் அதிக எண்ணிக்கை கொண்ட, ஒரே நாளில் பிறந்த குடும்ப உறுப்பினர்கள்' என்ற சாதனையைப் பெற்றுள்ளது.
மங்கி என்ற பெயர் கொண்ட குடும்பத்தில் அமீர் மற்றும் குதிஜா என்ற தம்பதியினர் இருவருமே ஆகஸ்ட் ஒன்றில் பிறந்தவர்கள். அதோடு அவர்களுக்கு பிறந்த 7 குழந்தைகளும் அதே தேதியில் பிறந்துள்ளனர். அவர்களின் குழந்தைகளான சிந்து, சசுய், சப்னா, அமீர், அம்பர், அமர் மற்றும் அஹ்மர் ஆகிய அனைவரும் 19 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள். இதே குடும்பம், 'ஒரே நாளில் பிறந்த அதிக எண்ணிக்கையிலான உடன்பிறப்புகள்' என்ற மற்றொரு சாதனையையும் உள்ளபடியே முறியடித்துள்ளது.
திருமண நாளும் இதேதான்
இந்த ஒன்பது பேரின் பிறந்த நாள் மட்டுமல்ல, அமீர் மற்றும் குதிஜா தம்பதியின் திருமண நாளும் அதுதான். இந்த ஜோடி 1991 ஆம் ஆண்டு அவர்கள் இருவரின் பிறந்தநாள் அன்று திருமணம் செய்து கொண்டனர். சரியாக ஒரு வருடம் கழித்து, அவர்களுக்கு மூத்த மகள் சிந்து பிறந்தார். அவர்களது பிறந்தநாளை ஒரே நாளில் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு அவர்களது குடும்பம் வளரும் என்பது அவர்களுக்கு அப்போது தெரியாது என்று கூறுகின்றனர்.
இரண்டு இரட்டையர்கள்
மங்கி குடும்பம் இரண்டு இரட்டைக் குழந்தைகளையும் பெற்றெடுத்தது, அவர்களும் ஆகஸ்ட் 1 அன்று பிறந்தனர். இரட்டைப் பெண் குழந்தைகளான சசுய் மற்றும் சப்னா பிறந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2003-இல் அம்மார் மற்றும் அஹ்மர் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். அப்போது அவர்களுக்கு ஐந்து குழந்தைகள் இருந்தனர். இதன் மூலம், 'ஒரே நாளில் பிறந்த அதிக இரட்டை உடன்பிறப்புகள்' என்ற சாதனையையும் சமன் செய்தன.
எல்லோருமே சுகப்பிரசவம்
கின்னஸ் உலக சாதனைகள் குறித்து அமீர் கூறுகையில், தனது குழந்தைகள் ஒரே நாளில் பிறக்க வேண்டும் என்று தான் வேண்டுமென்றே திட்டமிடவில்லை என்றும், “அது இயற்கையானது; அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது" என்றும் கூறுகிறார். அனைத்து குழந்தைகளும் கருத்தரித்து இயற்கையாகவே பிறந்ததாக மேலும் தகவல் தெரிவித்தார். குழந்தைகளில் யாருமே சிசேரியன் மூலம் பிரசவிக்கப்படவில்லை என்று கூறினார்.
ஆகஸ்ட் 1 - குடும்பத்தின் திருவிழா
இதனால், ஆகஸ்ட் 1, மங்கி குடும்பத்தில் ஒரு பெரிய கொண்டாட்ட நாளாக மாறிவிட்டது. "முன்பு நாங்கள் எங்கள் பிறந்தநாளை எளிமையான முறையில் கொண்டாடினோம், ஆனால் இப்போது நாங்கள் அதை பெரிதாகவும் மகிழ்ச்சியாகவும் செய்கிறோம்," என்று சசுய் கின்னஸ் உலக சாதனை பேட்டியில் கூறினார். அவர்களில் ஒன்பது பேர் ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஒரே கேக்கைப் பகிர்ந்து கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர். மங்கி குடும்பத்திற்கு கின்னஸ் உலக சாதனை பட்டம் வழங்கப்பட்ட பிறகு, அம்மார், "இந்த உலக சாதனையை வழங்குவதற்கு கடவுளுக்கு மிகவும் கடமைப்பட்டிருப்பதாக" உணர்ந்ததாகவும், அதே பிறந்த நாள் தனது குடும்பத்திற்கு "மிகவும் அதிர்ஷ்டமானது" என்றும் கூறினார்.