மேற்கிந்திய தீவுகள் அணியை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி அபார வெற்றி பெற்றது.


இந்திய அணி டிக்ளேர்:


டொமினிகாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 162 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி, மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடங்கியது. சிறப்பாக விளையாடி வந்த அறிமுக வீரரான ஜெய்ஷ்வால் 171 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கோலியும், 76 ரன்கள் சேர்த்து இருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர்களை தொடர்ந்து வந்த ரகானே 3 ரன்களிலும், ஜடேஜா 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து, 5 விக்கெட்டுகளை இழந்து 421 ரன்கள் குவித்து இருந்தபோது இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. மற்றொரு அறிமுக வீரரான இஷான் கிஷன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் கெமார் ரோச், அல்ஜாரி ஜோசப், கார்ன்வெல், வாரிகன் மற்றும் அதனசே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.


சரிந்த விக்கெட்டுகள்:


இதனைதொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். அந்த அணியில் அதிகபட்சமாக அதனசே மட்டும் 28 ரன்களை சேர்த்தர். களம் கண்ட 11 மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களில், 5 பேர் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்தனர். அவர்களில் ஒருவர் டக்-அவுட் ஆனார். மொத்தமாகவே அந்த அணி 130 ரன்களை மட்டுமே சேர்த்து படுதோல்வியை சந்தித்தது. இந்திய அணி சார்பில் சுழலில் மிரட்டிய அஷ்வின், 7 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார். அவருக்கு உறுதுணையாக ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.  இதன் மூலம், இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மேலும்,  2 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜெய்ஷ்வால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


முதல் 2 நாட்களின் சுருக்கம்:


டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி:


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பிறகு, கடந்த ஒரு மாத காலமாக ஓய்வில் இருந்த, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி, டொமினிகாவில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.


மே.தீவுகள் அணியின் முதல் இன்னிங்ஸ்:


இதையடுத்து, கேப்டன் பிராத்வெயிட் மற்றும் சந்தர்பால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 31 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து, 12 ரன்கள் எடுத்து இருந்தபோது சந்தர்பால்  அஷ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு பயம் காட்டினார். இதனால், 64.3 ஓவர்களுக்கு 150 ரன்களை சேர்ப்பதற்குள் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சுழற்பந்துவீச்சாளர்களான அஷ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதோடு, தாக்கூர் மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.


இந்திய அணி பேட்டிங்:


இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய யஷஷ்வி ஜெய்ஷ்வால் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோகித் சர்மா 103 ரன்களையும், ஜெய்ஷ்வால் 171 ரன்களையும் சேர்த்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் பின்பு 271 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய, மேற்கிந்திய தீவுகள் அணி வெறும் 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  இதன் மூலம், இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்துள்ளது.