கடந்த 1991ஆம் ஆண்டு, இந்தியாவில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. நிதித்துறை, பொதுத்துறை, வரி, வர்த்தகம், வெளிநாட்டு முதலீடு உள்ளிட்டவற்றில் சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர்தான், பல்வேறு நாடுகளுடன் இந்தியா வியூக ரீதியான உறவை வளர்க்க தொடங்கியது.


அதில் முக்கியமானது, பிரான்ஸ் நாட்டுடனான உறவு. கடந்த 1998ஆம் ஆண்டு முதல் இரு நாடுகளும் வியூக ரீதியான உறவை பேணி வருகிறது. அதை பறைசாற்றும் வகையில், பிரான்ஸில் நேற்று நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டத்தில் கெளரவ விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டார். 


பிரான்ஸ் நாட்டு தலைவர்களுக்கு பரிசு கொடுத்து அசத்திய பிரதமர் மோடி:


பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள் ஆகியவற்றை தவிர்த்து பிரான்ஸ், இந்திய நாடுகள் கலாசார ரீதியாகவும் பிணைக்கப்பட்டுள்ளது. அதை வெளிப்படுத்தும் வகையில், பிரான்ஸ் பிரதமர், அவரின் மனைவி, பிரதமர், பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் சபாநாயகர், செனட் தலைவருக்கு மோடி வழங்கிய பரசு அமைந்துள்ளது.


இந்திய ஜவுளி, கலை மற்றும் கைவினைத்திறன் ஆகியவற்றின் வளமான பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் பிரதமர் மோடியின் பரிசு உள்ளது. முற்றிலும் சந்தன மரத்தால் வடிவமைக்கப்பட்ட தனித்துவமான சித்தார் கருவியை அதிபர் மேக்ரானுக்கு பிரதமர் மோடி வழங்கினார். 


பரிசை பார்த்து வியந்த பிரான்ஸ் அதிபரின் மனைவி:


சந்தன மரத்தை கொண்டு பழங்கால பொருள்களை செய்யும் நடைமுறை தென்னிந்தியாவில் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. 
சந்தன மரத்தால் செய்யப்பட்ட அந்த சிதார் கருவியில் இந்தியாவின் தேசியப் பறவையான மயில்களின் சித்திரங்களுடன் சரஸ்வதி தேவி மற்றும் விநாயகப் பெருமானின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.


பிரான்ஸ் நாட்டின் முதல் பெண்மணி பிரிஜிட் மேக்ரானுக்கு, அலங்கார சந்தனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த போச்சம்பள்ளி பட்டு சேலையை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். துடிப்பான வண்ணங்கள் மற்றும் நுணுக்கமான வடிவமைப்புகளுக்கு பெயர் பெற்ற தெலங்கானாவில் உள்ள போச்சம்பள்ளியில்தான் இந்த சேலை நெய்யப்பட்டுள்ளது. சேலை வைக்கப்பட்டிருந்த சந்தனப் பெட்டி, பாரம்பரிய உருவங்கள் மற்றும் வரலாற்றின் காட்சிகளை சித்தரிக்கும் வகையில் செய்யப்பட்டிருந்தது.


பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் பரிசுகள்:


பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னுக்கு 'மார்பிள் இன்லே ஒர்க்' மூலம் அலங்கரிக்கப்பட்ட மேஜை பரிசாக வழங்கப்பட்டது. கவர்ச்சிகரமான கலைத்திறனுக்காக பெயர் பெற்ற, ராஜஸ்தானின் மக்ரானாவிலிருந்து உயர்தர பளிங்கு மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெறப்பட்ட விலையுயர்ந்த கற்களை கொண்டு இந்த மேஜை செய்யப்பட்டுள்ளது. கற்கள் கவனமாக வெட்டப்பட்டு, பொறிக்கப்பட்டு, பளிங்குக் கல்லில் அமைக்கப்பட்டு அழகான, வண்ணமயமான கலையை பிரதிபலிக்கிறது.


பிரெஞ்சு தேசிய நாடாளுமன்றத்தின் சபாநாயகரான யேல் பிரவுன் பைவேட்டுக்கு மிருதுவான நுட்பமான கைவினைத்திறனுக்காக உலகளவில் புகழ்பெற்ற கையால் பின்னப்பட்ட காஷ்மீரி கம்பளம் பரிசாக வழங்கப்பட்டது.


பிரான்ஸ் நாட்டின் செனட் தலைவர் ஜெரார்ட் லார்ச்சருக்கு சந்தன மரத்தில் செதுக்கப்பட்ட யானை உருவம் பரிசாக வழங்கப்பட்டது. இந்திய கலாசாரத்தின் ஞானம், வலிமை மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் வகையில் யானை அளிக்கப்பட்டது.