கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தை கவிழ்த்து தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். அவர்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் அந்த நாட்டில் ஏராளமான கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க ஆதரவு அரசு அமைவதற்கு முன்பு தலிபான்கள் ஆட்சி செய்தபோது இருந்த கடும் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு வருவது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
பல்கலை.யில் தடை
விதிக்கப்பட்டு வரும் பிற்போக்கான விதிகள் காரணமாக அந்த நாட்டு மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, பெண்களுக்கு எதிராக கொண்டு வரப்படும் மோசமான கட்டுப்பாடுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. தலிபான் அரசின் நடவடிக்கை உலக அளவில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமிய நாடுகள் உள்பட பல நாடுகள், இது இஸ்லாம் கோட்பாட்டுக்கு எதிரானது என கண்டனம் தெரிவித்துள்ளது. மனிதநேயத்திற்கு எதிரான குற்றம் என ஜி - 7 நாடுகள் விமர்சித்துள்ளது.
பணிபுரியத் தடை
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து உள்ளுர் மற்றும் வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்களில் பெண்களை பணியில் அமர்த்துவதை நிறுத்த வேண்டும் என தலிபான் அரசு நேற்று அறிவித்துள்ளது.
பொருளாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்ரஹ்மான் ஹபீப் உறுதிப்படுத்திய கடிதத்தின்படி, எந்ந ஒரு என்ஜிஓ நிறுவனமாக இருந்தாலும், இந்த உத்தரவை பின்பற்றவில்லை என்றால் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் முறையாக ஹிஜாப் அணிவதில்லை என ஏராளமான புகார்கள் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது கூறப்பட்டுள்ளது.
தலிபான்கள் உத்தரவால் அந்நாட்டு பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால், மாணவிகள், பெண்கள் என அனைவரும் கவலையடைந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை விதித்ததை அடுத்து, தலிபான்களின் நடவடிக்கையால் மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய இடைக்கால தலைமை தேர்வராக நியமிக்கப்பட்ட முன்னாள் வீரர்!