சீன அரசாங்கத்தின் உயர்மட்ட சுகாதார ஆணையத்தின் மதிப்பீடுகளின்படி, ஒரே நாளில் சீனாவில் கிட்டத்தட்ட 3.7 கோடி பேர் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட வேண்டும் என்று வேண்டுமென்றே விருப்பப்பட்டு ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செய்தி வேடிக்கையாகவும் அதேநேரம் ஆழம் தெரிந்தே காலை விடுவது போன்றும் இருக்கிறது.


யார் அந்த ஒருவர் என்று கேட்கிறீர்களா அவர்தான் சீனாவைச் சேர்ந்த இளம் பாடகி ஜேன் ஜாங். BF.7 ஒமைக்ரான் பாதிப்பை சீனா எதிர்கொள்ளும் நேரத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நண்பர் ஒருவருடன் இருந்து தானும் அந்தத் தொற்றால் வேண்டுமென்றே பாதிக்கப்பட்டதாக அந்தப் பாடகி தெரிவித்துள்ளார்.


அதற்கு அவர் விளக்கமும் தெரிவித்துள்ளார். அதாவது இம்மாத இறுதியில் பாட்டுக் கச்சேரியில் பங்கேற்க வேண்டும். அந்த சமயத்தில் நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் கச்சேரியில் பங்கு பெற முடியாது. அதனால்தான் இப்போதே வேண்டுமென்றே கொரோனாவால் பாதிக்க வேண்டும் என்று முயற்சித்தேன்.


காய்ச்சல், தொண்டை கமறல், உடல் வலி போன்ற அறிகுறிகள் இருந்தன. எனினும், இந்த அறிகுறிகள் எனக்கு ஒரே ஒரு நாள் தான் இருந்தது. அதன் பிறகு  ஓவர் நைட்டில் மறைந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார் அந்த 38 வயது பாடகி.


அதிக தண்ணீரையும், வைட்டமின் சியையும் எடுத்துக் கொண்டேன். மருந்துகள் எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை என்கிறார் அந்தப் பாடகி. ஆனால், இவர் போல் யாரும் முயற்சிக்க வேண்டாம் என்பதே மருத்துவ உலகம் சொல்லும் அறிவுறுத்தல் ஆகும்.






இதனிடையே, இந்தியாவில் கொரோனாவை தடுக்க முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கொரோனா நிலைமை குறித்து உயர்மட்ட குழுவுடன் ஆலோசனையில் நேற்று ஈடுபட்டார்.


மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் உயர் அதிகாரிகள் இந்த விர்ச்சுவல் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


புதிய வகை கொரோனா விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா விளக்கமளித்தார். தொடர்ந்து பேசிய அவர், சீனாவில் கொரொனா பரவல் நிலவரத்தை இந்தியா கவனித்து வருகிறது. கொரோனாவை தடுக்க முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும்.


இந்தியாவில் கொரோனா தொற்று விகிதம் குறைந்து வருகிறது. இருப்பினும், புதிய  கொரோனா வகையை கண்டறிய இந்தியாவில் சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் சோதனை தோராயமான மேற்கொள்ளப்பட்டு வருகிறது.