அரபு பெண்களிடையே உடல் பருமன் பிரச்சினை குறித்து பிரபல பிரிட்டன் நாளிதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், பிரபல ஈராக் நடிகையின் புகைப்படத்தை அந்த நாளிதழ் பயன்படுத்தியிருப்பது தற்போது சர்ச்சையாகி உள்ளது.
உலகின் புகழ்பெற்ற தி எகானாமிஸ்ட் நாளிதழுக்கு எதிராக ஈராக்கின் முன்னணி நடிகை எனஸ் தலேப் வழக்கு தொடர உள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், "ஜூலை இறுதியில் ஆன்லைனில் வெளியான எகனாமிஸ்ட் கட்டுரை தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளேன்" என்றார். மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளில் பாலினங்களுக்கு இடையே உடல் பருமனில் பெரிய இடைவெளி ஏற்பட்டிருப்பது குறித்து அந்த கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு, ஈராக்கில் நடந்த வருடாந்திர கலாசார பாபிலோன் திருவிழாவில் தலேப் எடுத்த புகைப்படம் அந்த கட்டுரையில் இடம்பெற்றிருந்தது.
42 வயதான தலேப், ஈராக்கின் பிரபலமான நடிகை ஆவார். 16 வயதிலிருந்தே தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் தோன்றியுள்ளார். மேலும் ஒரு டாக் ஷோ தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் 9 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். சர்ச்சைகுரிய அந்த கட்டுரையின் கடைசி பத்தி தலேப் குறித்து விவரித்துள்ளது. "பிரபல ரூபன்ஸ்-எஸ்க்யூ ஓவியத்தில் இருப்பது போல பெண்கள் இருக்க விரும்புகின்றனர். வீட்டில் பெண்களை அடைத்து வைப்பது அவர்களை அப்படியே வைத்திருக்க உதவுகிறது.
மற்றொரு ஈராக்கிய இல்லத்தரசி ஷிரீன் ரஷித் சில பவுண்டு எடையை குறைக்க விரும்புகிறார். ஆனால், அதிகம் இல்லை. ஒல்லியாக இருக்கும்போது, பெண்மையை இழப்பதாக அவர் கருதுகிறார். எடை குறைவதை அவருடைய கணவன் விரும்பவில்லை. படுக்கையில் ஒரு மரத்துண்டு போல இருந்து விடுவாரோ என்று அவரின் கணவர் அஞ்சுகிறார்" என கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், நடிகை தலேப்பின் புகைப்படங்களே இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், இணைய செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "தி எகானாமிஸ்ட்டின் கவர் ஸ்டோரிக்காக அவர்களுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளேன். இந்த சம்பவம் எனக்கு ஏற்படுத்திய உணர்ச்சி, மன மற்றும் சமூக பாதிப்புகளுக்கு இழப்பீடு கோரி வருகிறேன். நானும் எனது வழக்கறிஞர் குழுவும் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறோம்" என்றார்.
துபாய் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், "பழைய புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது. கட்டுரைக்கு தொடர்பே இல்லாமல் அந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரபு பெண்கள், குறிப்பாக ஈராக் பெண்களை அவமானப்படுத்தும் வகையில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள் என்னை பல வருடங்களாக நேசித்து வருகின்றனர். என்னுடைய அனைத்து சாதனைகளும் ஒன்றுமே இல்லை என அந்த கட்டுரையை பார்க்கும்போது தோன்றுகிறது. ஏமாற்றமாக உணர்கிறேன். நான் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். நான் இப்படி இருப்பதுதான் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு அதுதான் முக்கியம்" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்