மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டை மையப்படுத்தி நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டம். மேடையில் பேசிய அனைவரும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தனர்.
முருக பக்தர்கள் மாநாடு
மதுரை பாண்டிக்கோவில் ரிங் ரோடு அம்மா திடலில் ஜூன் 22-ஆம் தேதி முருக பக்த மாநாடு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முருக பக்தர்கள் மாநாடு முருகன் பெயரை கூறி மத மோதலை தூண்டும் வகையில் நடைபெறுவதாகவும் அரசியல் லாபத்திற்காக நடத்துவதாகவும் பல்வேறு அமைப்பினரும், அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோரும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் ஜூன் 22ஆம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு தொடர்பான பேச்சு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
முருக பக்தர்கள் மாநாடு
பாஜகவின் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், உள்ளிட்டோர் பேசும்போதும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அதிகளவிற்கு ஆதரவு தர வேண்டும் அனைத்து தரப்பினரும் வருகை தர வேண்டும் என கூறினர். மேடையில் பேசிய ஒவ்வொரு பாஜக முக்கிய நிர்வாகிகளும் ஜூன் 22ஆம் தேதி மதுரையில் நடைபெறக்கூடிய முருக பக்தர்கள் மாநாடு குறித்து தொடர்ந்து பேசினர். இந்நிலையில் மேடையில் வருகை தந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முருக பக்தர்கள் மாநாட்டை நினைவூட்டும் வகையில் முருகப்பெருமான் சிலையும் பெரிய வேலும் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த திருப்பரங்குன்றம்
கூட்டத்தில் முடிவாக சிறப்புரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போதும் ”ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்ற கூறும் துணிச்சல் இந்த திமுக அரசுக்கு வந்துள்ளது” எனவும், பல ஆயிரம் ஆண்டுகள் வணங்கிவந்த மலையை அரசியல் லாபம் கருதி பிரிவினையை ஏற்படுத்திவருகிறது. ஜூன் 22 ஆம் தேதி முருகபக்தர்கள் மாநாட்டில் இங்குள்ள அனைவரும் கலந்துகொண்டு தங்களது ஒற்றுமையை காட்ட வேண்டும், எனவும். முருக பக்தர்கள் மாநாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து பேசினார். தமிழகத்தில் மத்திய அமைச்சர் எல். முருகன் பாஜக மாநில தலைவராக இருந்தபோது வேல் யாத்திரை நடத்தப்பட்டது. பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருந்தபோது என் மண் என் மக்கள் யாத்திரை நடத்திய நிலையில், நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்ற நிலையில் மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு பாஜக முக்கியத்துவம் அளித்துவருவதும் குறிப்பிடதக்கது.