நியூசிலாந்தில் இன்று காலை 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருக்கும் கட்டடங்கள் குலுங்கின. இந்த நிலநடுகத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்து தற்போது வரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

Continues below advertisement






நியூசிலாந்தின் முக்கிய நகரான கிறிஸ்ட்சர்ச்சில் இருந்து மேற்கே, 124 கிலோ மீட்டர் தொலைவில் தென்மத்திய தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலில் இருந்து 11 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதால் பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் உள்ள தேசிய அவசரநிலை மேலாண்மை நிர்வாகம் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என அறிவித்துள்ளது.


சுமார் 50 லட்சம் மக்கள் தொகையை கொண்ட நியூசிலாந்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. நிலநடுக்கம் மற்றும் எரிமலைகள் வெடிப்புகள் அடிக்கடி நடைபெறும் பசிபிக் கடலை சுற்றியுள்ள ரிங் ஆஃப் பையர் என அழைக்கப்படும் பகுதியில் நியூசிலாந்து அமைந்துள்ளதால் நிலநடுக்கம் ஏற்படுகிறது.  


சில நாட்களுக்கு முன் வட ஆப்பிரிக்கா நாடானா மொரோக்கோவில் அதிகாலையில் 6.8 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மராகேஷுக்கு தென்மேற்கே 71 கிலோ மீட்டர் (44 மைல்) தொலைவில் உள்ள ஹை அட்லஸ் மலைகளின் 18.5 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் தொடர்ந்து 6 முறை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 நிமிடங்கள் தீவிரத்தன்மையுடன் இருந்த நிலநடுக்கம் அதற்கு பிறகு 4.9 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது. 


இந்த நிலநடுக்கத்தால் பதற்றம் அடைந்த மக்கள் நள்ளிரவில் வீட்டை விட்ட வெளியேறி வீதியில் தஞ்சம் அடைந்தனர். அதுமட்டும் இல்லாமல் வீடுகள், கட்டடங்கள் இடிந்து விழுந்தது.  இதனால் ஏராளமான பொதுமக்கள் இடிபாடுகளில் சிக்கினர்.  இதனையடுத்து மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதுவரை இந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3000 கடந்து பதிவாகியுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.நூற்றுக்கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்துள்ளனர்.