எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான எலன் மஸ்க், முன்னணு சமூக ஊடக வலைத்தளமான ட்விட்டரின் பெயரை ‘எக்ஸ்’ என்று மாற்றி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய மஸ்க் மற்றும் அவரது நிறுவன ஊழியர்கள் ட்விட்டரை தீவிரமாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். 


இந்தநிலையில், இதுவரை இலவசமாக பயன்படுத்தியக்கூடிய எக்ஸ்.காம்  விரைவில் கட்டணச் சேவையாக மாறும் என்று எலன் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், அனைத்து எக்ஸ் வாடிக்கையாளர்களும் தங்களது சேவைகளை பெற விரும்பினால், ஒரு குறிப்பிட்ட தொகையை மாதாந்திர சந்தாவாக செலுத்த வேண்டும். எக்ஸ் அதாவது ட்விட்டரில் உலா வரும் போலி கணக்குகளுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், சிஎன்பிசி அறிக்கையின்படி, இந்த மாதத் தொகை எவ்வளவு என்று மஸ்க் குறிப்பிடவில்லை. 


இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் உரையாடலின்போது எலன் மஸ்க், சில எக்ஸ் தொடர்பான புள்ளிவிவரங்களையும் வெளிப்படுத்தினார். அதன்படி, எக்ஸ் தற்போது 55 கோடி மாதாந்திர செயலியில் உள்ள சந்தாதாரர்களை கொண்டுள்ளது. அதில், தினமும் 10 கோடி முதல் 20 கோடி பதிவுகள் பகிரப்படுகின்றன. 


இந்த மாதாந்திர கட்டணத்தின் மூலம் எக்ஸில் உள்ள வாடிக்கையாளர்களில் எத்தனை பேர் உண்மையான வாடிக்கையாளர்கள் மற்றும் எத்தனை போலி வாடிக்கையாளர்கள் என்பதை கண்டறியலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மற்றும் மஸ்க் ஆகியோர் இணையத்தில் அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என நம்பப்படும் AI-இன் அச்சுறுத்தல்கள் மற்றும் அதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது பற்றி விவாதித்தனர். 






எக்ஸ் பிரீமியம் தற்போது அமெரிக்காவில் ஒரு மாதத்திற்கு $8 (£6.50) கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது. சந்தாதாரர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பதை பொறுத்து விலை மாறுபடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


இழப்பை சந்திக்குமா எக்ஸ்..?


மாதாந்திர கட்டணம் எக்ஸில் கொண்டு வந்தால், பெரும்பாலான பயனர்கள், எக்ஸில் இருந்து வெளியேறும் அபாயம் ஏற்படும். இதை தொடர்ந்து, எக்ஸ் நிறுவனத்திற்கு கிடைக்கும் விளம்பர வருவாய் குறைந்து, பெரிய இழப்பை சந்திக்கும் சூழலை உருவாக்கும். 


தொடரும் பல்வேறு மாற்றங்கள்: 


ட்விட்டரை $44 பில்லியனுக்கு வாங்கிய பிறகு, எலன் மஸ்க் ட்விட்டரில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்தார். முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போன்ற முன்னர் தடைசெய்யப்பட்ட ட்விட்டர் கணக்குகளை எலன் மஸ்க் திரும்ப பெற்று பயன்படுத்த அனுமதித்தார். பிரபலமான நபர்களின் கணக்குகளை அடையாளம் காணும் "ப்ளூ செக்" சரிபார்ப்பு முறையையும் அவர் நீக்கினார்.


இதையடுத்து, ​​நீங்கள் கட்டணம் செலுத்தினால் மட்டுமே உங்கள் பெயருக்கு பின் பகுதியில் நீல நிற பேட்ஜைப் பெறுவீர்கள் என அறிவித்து உலகை திரும்பி பார்க்க செய்தார். நீங்கள் பணம் செலுத்தவில்லை என்றால், உங்கள் பதிவுகள் அதிக கவனத்தைப் பெறாமல் போகலாம் என்றும் இந்த மாற்றம் ட்விட்டரில் அதிக அளவிலான பதிவுகளை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துவதாக மஸ்க் தெரிவித்தார்.