பில்கேட்ஸ் தனது தொண்டு நிறுவனம் மூலம் நிறைய உதவிகளை உலக நாடுகளுக்கு எல்லைகள் தாண்டி செய்து வருகிறார் என்பதையும் படித்திருக்கிறோம். அண்மையில், அவருக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பான செய்திகளையும் படித்து வருகிறோம். ஒரு மாறுதலுக்கு அவரின் பிரம்மாண்ட பங்களாவைப் பற்றியும் அறிந்து கொள்வோமே. கரீபீயன் தீவுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல், 6 மீட்டர் உயரம் கொண்ட அறைகள், நீச்சல் குளங்கள், கான்ஃபரன்ஸ் அறைகள், என பிரம்மாண்டமாகக் கட்ட 63 மில்லியன் அமெரிக்க டாலர் செலவானது என்றால் நம்புவீர்களா? ஆம் இவ்வளவு பெரிய பொருட்செலவில் 7 ஆண்டுகளாக இந்தக் கட்டிடத்தை முடிக்கச்செய்திருக்கிறார் பில்கேட்ஸ்.


வீட்டிற்குப் பெயரில்லாமலா?


இவ்வளவு பிரம்மாண்டமாக வீட்டைக் கட்டிவிட்டு பெயர் வைக்காவிட்டால் எப்படி? பில் கேட்ஸும் தனது வீட்டுக்குப் பெயர் வைத்திருக்கிறார். வாஷிங்டன்னில் உள்ள இந்த வீட்டுக்கு சனாடு 2.0 (Xanadu 2.0), இதுதான் பில்கேட்ஸ் வீட்டின் பெயர். இந்த வீட்டில் பல அரிய பொருட்கள் இருக்கின்றன. அதிலொன்று லியானார்டோ டாவின்சியின் கைவண்ணம். 


7 படுக்கை அறைகள்:


பில் கேட்ஸ் வீட்டில் வெறும் 7 படுக்கை அறைகள் மட்டும்தான் உள்ளன. என்ன, வெறும் 7 என்று சொல்கிறீர்களே என ஆச்சர்யப்பட வேண்டாம். அவரது வீடு அமைந்திருக்கும் நிலப்பரப்பில் 30 படுக்கை அறைகள் கட்டலாம். ஆனால், அத்தனை கட்டி என்ன செய்யமுடியும் என்பதால் 7 கட்டியிருக்கின்றனர்.




சமையலறைகள்:


பில்கேட்ஸ் வீட்டில் மொத்தம் 6 சமையலறைகள் உள்ளன. வீடு முழுவதும் 24 குளியலறைகள் உள்ளன. இவற்றில் 10-இல் பாத்டப் வசதியும் இருக்கிறதாம்.


வரவேற்பறை :


வரவேற்பறையில் மட்டும் பிரம்மாண்டத்துக்கு குறைவா என்ன? 200 பேர் அமரும் வசதிகொண்டது இந்த வரவேற்பறை. 22 அடி வீடியோ ஸ்க்ரீன் உள்ளது. அருகில் 6 அடி உயர லைம்ஸ்டோன் கட்டமைப்பில் குளிர்காயும் இடமும் உள்ளது.




நீச்சல்குளம்:


பில்கேட்ஸ் வீட்டில் உள்ள நீச்சல்குளம் 3,900 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. 60 அடி நீளமுள்ள இந்த நீச்சல் குளத்தில் பல புதுமைகள் இருக்கின்றன. மேலே கண்ணாடியால் அடைக்கப்பட்ட ஒரு பகுதியில் நீந்தியவாறே வீட்டின் மொட்டை மாடிப்பகுதிக்குச் சென்றுவிடலாம். நீச்சல் குளத்தில் பாட்டு கேட்டுக்கொண்டே குளிக்க ஏதுவாக அண்டர்வாட்டர் சவுண்ட் சிஸ்டம் வைத்துள்ளார்கள்.


வாகனம் நிறுத்துமிடங்கள்: 


பில்கேட்ஸ் வீட்டின் வளாகத்தில் பல இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன. அதில் மிகவும் கவர்ச்சியானது ஒரே நேரத்தில் 10 கார்களை நிறுத்தும் வகையிலான கராஜ். முழுக்க முழுக்க ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் கான்க்ரீட்டால் கட்டப்பட்டது. கூரையில் ஆங்காங்கே வேண்டுமென்றே சில இடங்கள் அழகுக்காக உடைத்துவிடப்பட்டுள்ளன.




லைட்டிங் சிஸ்டம்:


பில்கேட்ஸ் வீட்டின் லைட்டிங் அமைப்பு ஹைடெக் சென்சார் மூலம் கண்காணிக்கப்படுகிறது. வெவ்வேறு பருவநிலைகளை உணர்த்தும் வகையில் லைட்டிங் அமைப்பு உள்ளது. ஒவ்வொரு அறையிலும் விதவிதமான லைட்டிங் அமைப்பு செய்துகொள்ளலாம்.


செயற்கை ஊற்று :


பில்கேட்ஸ் வீட்டிலுள்ள செயற்கை ஊற்றைக்காண இருகண்கள் போதாது. அவ்வளவு ரம்மியமான அந்த ஊற்றில் சால்மன் மீன்களும், ட்ரவுட் மீன்களும் துள்ளி விளையாடும்.


World Bicycle Day 2021 | 'உடம்புக்கும் நல்லது, ஊருக்கும் நல்லது' - சைக்கிளின் அவசியமும், ஆரோக்கியமும்!


கலைநுட்பங்கள் :


நம் வீடுகளிலும் அலங்காரப் பொருட்கள் சுவர் ஓவியங்கள் இருக்கும். ஆனால் பில்கேட்ஸ் அவர் வீடு முழுவதும், ஆங்காங்கே வைத்திருக்கும் கலைப்பொருட்கள், ஓவியங்களின் மதிப்பு 80,000 டாலர். சுவரில் மாட்டப்பட்டிருக்கும் ஓவியம், கலைப்பொருள் அல்லது அலங்காரப் பொருட்களுக்கு ஏற்ப அந்த அறையின் லைட்டிங்கை மாற்றிக் கொள்ளலாம். பில்கேட்ஸின் விருப்பத்துக்குரிய கலைப்பொருட்கள் அடங்கிய ஸ்டோரேஜ் டிவைசின் விலை மட்டு 150000 டாலர்.




சூழல் நட்பு வீடு :


பில்கேட்ஸ் வீடு முழுவதும் தொழில்நுட்பம் நிறைந்திருந்தாலும், ஒட்டுமொத்த வீடு அமைந்துள்ள பகுதி உயர்ந்த மரங்களால் சூழப்பட்டு இயற்கை எழில் கொஞ்சம் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஓங்கி உயர்ந்து மரங்களுக்கு ஊடே உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய பங்களா. பில்கேட்ஸ் வீட்டின் விர்ச்சுவல் டூர் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நினைக்கிறோம்.