நாம் அனைவருமே ஓட்டிய முதல் வாகனம் என்றால் அது சைக்கிளாகத் தான் இருக்கும். நடக்கத்தொடங்கும் ஏறி அமரும் 3 சக்கர குட்டி சைக்கிள்தான் குழந்தைகளின் பேவரைட். அதன் பின் அது மெல்ல சைக்கிளாக உருமாறி, பின்னர் பைக், கார் என என முன்னேறுகிறோம். ஆனால் சைக்கிள் என்பது நாம் குறிப்பிட்ட வயதில் விட்டுவிட வேண்டிய வாகனம் அல்ல. நம் வசதிக்கும் தேவைக்கும் ஏற்ப வாகனங்கள் மாறினாலும் என்றுமே நம் கையில் ஒரு சைக்கிள் இருக்க வேண்டும். சைக்கிள் என்பது போக்குவரத்துக்கான வாகனம் மட்டுமல்ல. உடல் ஆரோக்கியத்திற்கான ஒரு உடற்பயிற்சியும் கூட. ஜூன் 3ம் தேதி உலக சைக்கிள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. சைக்கிள் ஓட்டுவதால் உடலுக்கு, ஊருக்கும் என்ன நல்லது? பார்ப்போம்.




இதயத்துக்கு ரொம்ப நல்லது:
சைக்கிள் ஓட்டுவது உங்கள் இதயத்திற்கு மிக நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். சைக்கிள் மிதிப்பதால் உங்கள் இதயம் பலமடைகிறது. அதுமட்டுமல்லாமல் இதய நோய் ஏற்படுவதை தடுக்கிறது. தினமும் சைக்கிள் மிதிப்பதால் உங்கள் ரத்த அழுத்தம் சீராகவே இருக்கிறது. ரத்த அழுத்தம் சீராக இருப்பதால் இதய நோய் தொடர்பாக நோய்கள் தூரமாக இருக்கின்றன.


உடல் எடை:
உங்களுக்கு உடல் எடை தான் பிரச்னையா? நீங்கள் சைக்கிள் ஓட்டலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.உடல் எடையை குறைப்பதில் சைக்கிள் ஓட்டுவது சிறந்த பலனைத் தருகிறது. ஒரு மணி நேரம் வியர்க்க வியர்க்க சைக்கிள் ஓட்டுவது400 முதல் 1000 கலோரி வரை நீக்குகிறது. கலோரிகளின் அளவு சைக்கிள் ஓட்டுபவர்களின் எடையை பொருத்து மாறுகிறது.




நுரையீரல்:
கொரோனா காலக்கட்டத்தில் அதிகம் பேசப்படும் உறுப்பாக நுரையீரல் இருக்கிறது. நுரையீரலை உறுதிப்படுத்த மூச்சுப்பயிற்சி எல்லாம் பரவலாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த அளவுக்கு முக்கியமான நுரையீரலை பலப்படுத்த சைக்கிளிங் முக்கிய வேலையை செய்கிறது.சைக்கிள் மிதிக்கும் போது நாம் ஒவ்வொரு முறையும் நம் நுரையீரல் சுத்தமான ஆக்சிஜனையே எடுக்கிறது. களைப்படைந்து நாம் இழுத்து மூச்சுவிடுவது உடல் உறுப்புகளுக்கு சரியான ஆக்சிஜனை கொடுக்கிறது. அதனால் இதயம் மட்டுமல்ல நுரையீரலுக்கும் மிக நல்லது சைக்கிள்


>> உங்கள் கல்லீரலை இயற்கையாகவே சுத்தம் செய்யும் 8 சூப்பர் உணவுகள்!


உறுதியான கால்கள்:
சாதாரணமாக சைக்கிள் மிதித்து செல்வது போல இருந்தாலும் சைக்கிளிங் காலுக்கு சிறந்த உடற்பயிற்சி. குறிப்பாக இடுப்புக்கு கீழே பலமாகிறது.இடுப்பு, முட்டி போன்ற பகுதிகளும் சைக்கிளிங் செய்வதால் உறுதியாகின்றன.




எளிதானது; ஆரோக்கியமானது:
சைக்கிளிங் உடலுக்கு மிக எளிதான ஆனால் அதிகம் பலன் தரக்கூடிய உடற்பயிற்சி. மூட்டுப்பிரச்னைகள் உள்ளவர்களுக்கு சைக்கிளிங் நல்ல நிவாரணியாக இருக்கும்.இது உடற்பயிற்சியை தொடங்குபவர்களுக்கும் மிக எளிதானது, ஆரோக்கியமானது.


மனதுக்கும் நல்லது:
சைக்கிளிங் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, மனதுக்கும் மிக நல்லது.மனச்சோர்வு, மன உளைச்சல், கோபம் போன்ற மனம் தொடர்புடைய பிரச்னைகளுக்கு சைக்கிளிங் ஒரு நல்ல தீர்வு. சைக்கிளை மிதித்து நகரத்தொடங்கினால் உங்கள் மனம் புத்துணர்ச்சியாக மாறும். சாலையை கவனித்து சைக்கிளிங் செய்வதால் உங்களது கவனிக்கும் திறனும் அதிகரிக்கிறது.




இவையெல்லாம் சைக்கிளிங் செய்வதால் நம் உடலுக்கு ஏற்படும் நல்லது. இவை இல்லாமல் நாம் ஏன் சைக்கிளிங் செய்யலாம் என்று பார்த்தால், சைக்கிளிங் இந்த பூமிக்கும் நல்லது செய்கிறது. எரிபொருள், புகை என எதுவும் இல்லாமல் சுற்றுச்சூழலுக்கு நண்பனாக இருக்கிறது சைக்கிள். சைசென்ஸ் போன்ற ஆவணங்கள் எல்லாம் சைக்கிளுக்கு வேண்டாம். ஒரு சைக்கிள் இருந்தால் அமைதியாக மிதித்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கலாம். 


இந்தியாவை பொருத்தவரை அனைத்து பயணங்களுக்கும், அனைத்து சாலைகளுக்கும் சைக்கிள் உகந்ததாக இருக்காது என்பதும் மறுக்க முடியாத உண்மை தான். ஆனால் நம் வீட்டில் ஒரு சைக்கிளை வைத்துக்கொண்டு தகுந்த பயணங்களுக்காகவாவது சைக்கிளை எடுப்பது உடலுக்கும், ஊருக்கும் நல்லது தானே!


>> சுகர் தான் ரிஸ்க்... கொரோனா உயிரிழப்புக்கு வழிவகுக்கும் நீரிழிவு - புள்ளிவிவரம் வெளியிட்ட தகவல்கள்!