புதுச்சேரி காவல்துறையைச் சேர்ந்த காவலர்களுக்கு இணையாக ஐஆர்பிஎன் காவலர்களுக்கு சிறப்பு நிலை துணை உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு நிலை உதவி ஆய்வாளர் பதவிகள் வழங்குவதற்குத் துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் தந்துள்ளார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று முக்கியக் கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
’’புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும்’’- தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் என்.ரங்கசாமி பேச்சு
அதன் விவரங்கள் :
1. 2020-21ஆம் நிதியாண்டில், மத்திய அரசின் “குழந்தைகள் பாதுகாப்பு சேவை” திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகப் புதுச்சேரி மாநிலக் குழந்தைகள் பாதுகாப்புச் சங்கத்திற்கு முதல் தவணையாக ரூ.1.29 கோடி நிதியுதவி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.
2. சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆலோசனைப்படி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.ராஜாவைப் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்ட சேவைகள் ஆணையத்தின் நிர்வாகத் தலைவராக நியமிக்க ஒப்புதல் தந்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில், பிரதம மந்திரி குறு-உணவுப் பதப்படுத்தும் நிறுவனத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகப் புதுச்சேரி பிப்டிக் நிறுவனத்திற்கு ரூ.1.45 கோடி நிதிக்கொடை வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.
3. புதுச்சேரி பாகூர் கொம்யூன் பகுதியை 02.10.2021 முதல் ஒருமுறை பயன்பாட்டு நெகிழி இல்லாத பகுதியாக அறிவிக்க ஒப்புதல் தந்துள்ளார்.
4. புதுச்சேரி காவல்துறையைச் சேர்ந்த காவலர்களுக்கு இணையாக ஐஆர்பிஎன் காவலர்களுக்குச் சிறப்பு நிலை துணை உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு நிலை உதவி ஆய்வாளர் பதவிகள் வழங்குவதற்கு ஒப்புதல் தந்துள்ளார்.
5. 2021-22 கல்வியாண்டு முதல் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 60 இடங்கள் கொண்ட இளங்கலை (பி.ஏ.ஆங்கிலம்) பட்டப் படிப்பைப் புதிதாகத் தொடங்குவதற்கு அனுமதி தந்துள்ளார்.
மேலும், காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் இளம் வணிகவியல் (பி.காம்) பட்டப் படிப்பில் கூடுதலாக 64 இடங்களுடன் மாணவர் சேர்க்கையை இரட்டிப்பாக்க அனுமதித்துள்ளார்.