ஜெய்பீம் படத்தில் வரும் காட்சிகளை போல் தற்போது கள்ளக்குறிச்சி அருகே ஒரு உண்மை சம்பவம் அரங்கேறியுள்ளது இந்த சம்பவத்தில் 5 உழவர்களை சிறப்பு அதிரடி போலீசார் என இரவில் வீடு புகுந்து கதவை உடைத்து கடத்திச் சென்றுள்ளனர் இச்சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அவரது மனைவி புவனேஸ்வரி அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: நான் புவனேஸ்வரி பிரகாஷ் வயது 23 தில்லைநகர் சின்னசேலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் என் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். நான் தாழ்த்தப்பட்ட இந்து குறவர் சமூகத்தைச் சேர்ந்தவன் நாங்கள் கேரளாவில் மரம் வெட்டும் தொழில் செய்து தினக்கூலியாக வேலை செய்துவருகிறோம். தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக நாங்கள் எங்கள் குடும்பத்துடன் கிராமத்திற்கு வந்தோம்.
குடும்ப சண்டையால் கணவரிடம் இருந்து பிரிந்து வந்துள்ள என் கணவரின் அக்கா பிரியா (26) வை அழைத்து செல்வதற்காக அவருடைய கணவர் தர்மராஜ் (35) த/பெ. பெரியசாமி மற்றும் செல்வம் (55) த/பெ. கண்ணன் ஆகியோர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தனர். அப்போது மழை பெய்ததால், காலையில் செல்லலாம் என்று எங்கள் வீட்டிலையே தங்கிருந்தனர். இந்நிலையில் கடந்த நவம்பர் 14, 2021 ஞாயிற்றுகிழமை அன்று இரவு சுமார் 11.45 மணியளவில் எங்கள் வீட்டில் எனது கணவர் பிரகாஷ் (25) , எங்கள் உறவினர் தர்மராஜ் (35) த/பெ. பெரியசாமி மற்றும் குழந்தைகள் எங்கள் வீட்டில் கதவை தாழ்ப்பாள் போடாமல் திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தோம். வீட்டு வாசல் அருகே செல்வம் (55 வயது) த/பெ. கண்ணன் படுத்து தூக்கிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென சுமார் 10க்கும் மேற்பட்ட சீருடை அணியாத சிறப்புப்படை போலீஸார் மளமளவென எங்கள் வீட்டிற்குள் அத்துமீறி வீட்டிற்குள் உள் நுழைந்தனர்.
அதில் பெயர் தெரியாத அடையாளம் தெரிந்த காவலர்களும் இருந்தனர். என் சார் இப்படி பண்றீங்க உங்களுக்கு என்ன வேணும், பொம்பள புள்ளைக படுத்திருக்கும் போது இப்படி வீட்டுகுள்ள அத்துமீறி நுழைவது நியாமா? என்று என்னுடைய வீட்டுக்காரர் கேட்டதற்கு ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன், சும்மா இருக்கியா இல்லை, இரும்பு கம்பியால அடிச்சு கொல்லனுமா என்று மிரட்டினார். திடீரென, அங்கு வந்திருந்த போலீஸ்காரரில் ஒருவர் எனது கணவரையும் என் நாத்தனாரின் கணவர் தர்மராஜ் (35 வயது) த/பெ. பெரியசாமி, செல்வம் (55 வயது) த/பெ. கண்ணன் ஆகிய இருவரையும் வலுக்கட்டாயமாக வெள்ளைநிற டெம்போவில் ஏற்றிச் சென்றார். நாங்கள் எதற்கு அழைத்து செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு பதிலளிக்காமல் போறீயா இல்ல அடி வாங்குறீயா என்று கூறி, கையில் வைத்திருந்த கம்பால் அடிக்க வந்தனர்.
எனது கணவர் மற்றும் உறவினர்களை வாரண்ட் இன்றி அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட எனது கணவர் மற்றும் உறவினர்கள் இருவரின் விவரங்களையும் தெரிவிக்க மறுகின்றனர். இதுவரை எனது கணவர் மற்றும் உறவினர்கள் சட்ட விரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டதற்கான எந்தத் தகவலும் எங்களுக்கு வழங்கப்படவில்லை மேலும் எனது கணவர் மற்றும் எங்கள் உறவினர்கள் இருவரும் எங்கிருக்கிறார்கள் என்பதும் எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. மேற்படி, சின்னசேலம் காவல் நிலையத்தில் இருப்பதாக தகவல் தெரிந்து நேற்று 15.11.2021 அன்று அக்காவல்நிலையத்திற்கு சென்று காவல் ஆய்வாளரிடம் கேட்டப்போது மேற்படி யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் இருப்பதாக கூறினார்கள்.
அங்கு சென்று பார்த்தால் அங்கேயும் இல்லை என்று கூறுகின்றனர். இது குறித்து இணைய தள வாயிலாக காவல் கண்காணிப்பாளர் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு 15.11.2021 அன்று புகார் மனு அனுப்பினோம். இந்நிலையில், இன்று செவ்வாய்கிழமையன்று காலை சின்ன சேலத்தில் வசித்து வருகின்ற விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட செல்வம், தர்மராஜின் தம்பி பாமசிவம் (42) தபெ. கண்ணன் மற்றும் சக்திவேல் (29) தபெ. பெரியசாமி ஆகியோரயும் சுமார் 20 க்கும் மேற்பட்ட காவலர்கள் ஊருக்குள் புருத்து அடித்து இழுத்து சென்றுள்ளனர்.
தற்போது, என்னுடைய கணவர் மற்றும் உறவினர்கள் இருவரும் எந்த குற்றமும் செய்யாத நிலையில், விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவல் இல்லை அவர்களது உயிருக்கும் உடைமைக்கும் எந்தவித ஆபத்து ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறும், நாங்கள் பட்டியல் சாதி இந்து குறவன் சாதியைச் சேர்ந்தவர்கள் என்கிற ஒரே காரணத்திற்காகவும், படிப்பறிவில்லாத ஏழ்மை நிலையில் வசிக்கின்ற எங்களின் மிகவும் பின்தங்கிய சமூக பொருளாதார பின்னணியையும் காரணமாக வைத்து எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களையும் தொடர்ந்து அச்சுறுத்தியும் வருகின்ற அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத சுமார் 15 காவலர்கள் மீது துறைரீயான நடவடிக்கையும், பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்பு திருத்த சட்டம் 2015 பிரிவு 3 (1) p. 3 (1) (r), 3 (1) (z) ன் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் பட்டியல் சாதியான எங்களுக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 2015 பிரிவு 15A)ன் கீழ் காவல்துறை எவ்வித பொய் பதிவு செயவதில் இருந்து பாதுகாப்பு வழங்குமாறும் பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்.