கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் மாவட்ட திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வேளாண் மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட அனைத்து துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திட்டப்பணிகள் குறித்தும் திட்டப் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டது.
இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர் செல்வம், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்பு காரணமாக முழுவதுமாக பாதிக்கப்பட்ட நெல் விளை நிலங்களுக்கு ஹெக்டருக்கு 20 ஆயிரம் ரூபாயும் பகுதி பாதிக்கப்பட்டவர்களுக்கு 6,032 ரூபாய்க்கான இடுபொருட்கள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். 6 மாதத்தில் இரண்டாவது தொகுப்பு இது, குறுவைக்கு ஏற்கனவே ஒரு தொகுப்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு தொகுப்பு விலையில்லாமல் வழங்கப்படுகிறது, இதுவரையில் யாரும் செய்திராத ஒன்று.
மேலும் இந்த மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் 1,62,000 ஏக்கர் விளை நிலங்களில் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி இருக்கிறது, 33 சதவீதத்திற்கு மேல் 2845 ஏக்கர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளது, இதில் நெல் மட்டும் 2670 ஏக்கரில் பாதிக்கப்பட்டுள்ளது எனவும்,டெல்டா பகுதிகளில் மொத்தம் 43,65,000 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப் பட்டிருக்கும் நிலையில் 1,58,574 ஏக்கர் தண்ணீரில் மூழ்கி உள்ளதாகவும் இதில் நெல் மட்டும் 1,39,412 ஏக்கர் என தெரிவித்த அவர் 33 சதவீதத்திற்கு மேல் 1,43,862 ஏக்கர் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கடந்த நவம்பர் மாதத்தில் பெய்த மழைக்கு நிவாரணத்தினை கடந்த ஆட்சி காலத்தில் ஜனவரி மாதத்தில் தேர்தலை கருத்திற்கொண்டு தாமதமாக அறிவிக்கப்பட்டது, ஆனால் தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடகிழக்கு பருவமழை தொங்கிய நிலையிலேயே நிவாரணங்கள் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உரத் தட்டுப்பாடு என்பது உலகளவில் பெரிய சவாலாக இருக்கிறது. தமிழகத்தை பொருத்தவரை தற்போது உரம் காரைக்கால் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அது மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருவதாகவும். தற்போதைய நிலையில் உரத்தட்டுப்பாடு ஏதுமில்லை கையிருப்பு சரியாக உள்ளது என தெரிவித்தார். மேலும் சென்னை வெள்ளம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, எதிர்கட்சிகள் செய்த தவறை மறைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தினை முறையாக அமல் படுத்தாமல், ஸ்மார்ட் சிட்டி எனக்கூறி வொர்ஸ்ட் சிட்டி ஆக சென்னையை மாற்றி வைத்துள்ளனர் என குற்றம் சாட்டினார்.