புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை பிரபல தயாரிப்பாளர் போனிகபூர் சட்டப்பேரவை வளாகத்தில் சந்தித்து உரையாடினார். விரைவில் புதிய படப்பிடிப்புக்கு வாய்ப்புள்ளதாக திரைப்பட வட்டாரங்கள் குறிப்பிட்டன. மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல தயாரிப்பாளருமான போனிகபூர் மரியாதை நிமித்தமாக முதல்வர் ரங்கசாமியை சட்டப்பேரவை வளாகத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் சிறிது நேரம் இருவரும் உரையாடினர். இச்சந்திப்பின் போது பேரவை துணைத்தலைவர் ராஜவேலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இச்சந்திப்பின் போது திரைப்படப் படப்பிடிப்புக்கு ஏற்ற நகரம் புதுச்சேரி. திரைப்படம் படப்பிடிப்பு நடத்த விருப்பமுள்ளது. ஹோட்டல்கள் உட்பட தேவையான கட்டமைப்பு தேவை என்று முதல்வரிடம் போனிகபூர் குறிப்பிட்டதாக சட்டப்பேரவை வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னர் செய்தியாளர்களிடம் போனிகபூர் கூறுகையில், பிரெஞ்சு கலாசாரத்துடன் உள்ள புதுச்சேரியை மிகவும் பிடிக்கும். அடிக்கடி பல பாலிவுட் ஹீரோக்கள் புதுச்சேரி வருகின்றனர். படப்பிடிப்புகளும் நடக்கின்றன. அதனால், நானும் புதுச்சேரி வந்தேன். தற்போது மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்து முக்கிய விஷயங்கள் பற்றி உரையாடினேன் என்று குறிப்பிட்டார். இதையடுத்து விரைவில் புதுச்சேரியில் பாலிவுட் படப்பிடிப்புகள் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் திரைப்பட வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
மேலும், புதுச்சேரி மாநிலம் சுற்றுலாத் தளமாக விளங்கி வருகிறது. இங்கு தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழித் திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் நடைபெறுவதுண்டு. புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பிற்காக ஒரு இடத்தில் காட்சிகளை எடுப்பதற்கு, புதுச்சேரி நகராட்சி சார்பில் 5 ஆயிரம் வரி வசூல் செய்து வந்த நிலையில், திடீரென கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்த வரிவிதிப்புக் கட்டணம் 28 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த வரிவிதிப்பு அதிகரிக்கப்பட்டது. பிற மாநிலங்களைக் காட்டிலும் இந்த வரிவிதிப்பு குறைவு என்றாலும், திரைப்படத் துறையினர், உயர்த்திய வரிவிதிப்பைக் குறைக்க வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
வருவாய் குறைவாக உள்ள சூழலிலும் பிற மாநிலங்களை விடக் கட்டணம் குறைவாக இருந்தாலும் திரை நட்சத்திரங்கள் இக்கட்டணத்தைக் குறைக்குமாறு முதல்வர் ரங்கசாமியை வலியுறுத்தி வருகின்றனர். புதுச்சேரிக்குப் படப்பிடிப்புக்கு வந்த நடிகர்களான கே.பாக்யராஜ், விஜய் சேதுபதி, பிரசாந்த்,சந்தானம் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்