கள்ளக்குறிச்சி அருகே பிளஸ் 2 மாணவி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் மற்றும் பெற்றோர், அந்த பகுதி மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியதுடன், அங்கிருந்த பஸ்கள், வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர். அப்போது மாணவ-மாணவிகளின் சான்றிதழ்களையும் தீ வைத்துக் கொளுத்தினர். இதனால் பள்ளி வளாகம் போர்க்களமாக மாறியது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 

இந்த போராட்டத்தால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நீடித்து வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கலவரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவி மரண வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 


 

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்கானூங்கோ தலைமையிலான குழுவினர் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மர்மமான மரணம் தொடர்பாக இன்று விசாரணை செய்ய தொடங்கினர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி விடுதியில் மாணவி உயிரிழந்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளனர். இதற்காக ஜூலை 26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மூன்று நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
  

 

இதில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவரான பிரியங் கானூங்கோ உடன் ஆணையத்தின் இரண்டு ஆலோசகர்கள் வருகின்றனர். இவர்களுடன் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் வந்துள்ளனர். இன்று கள்ளக்குறிச்சி வந்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அதன் தலைவர் பிரியங் கானூங்கோ கடலூர் மாவட்டம் வேப்பூர் பெரிய நெசலூர் கிராமத்தில் உள்ள உயிரிழந்த மாணவியின் பெற்றோரை சந்தித்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

இதனையடுத்து மாணவி உயிரிழந்ததாக கூறப்படும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதிக்கு விசாரணைக்காக செல்கின்றனர். மொத்தம் 7 அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே மாநில குழந்தைகள் உரிமைகள் ஆனையம் விசாரணையில் பள்ளி விடுதி அனுமதி இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது தேசிய குழந்தைகள் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.