பள்ளி மாணவர்களுக்கு உடல்,மன நல விழிப்புணர்வு அளிக்கும் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி, திருவள்ளூர் மாணவி சரளா ஆகியோர் தற்கொலை சம்பவங்கள் தமிழகத்தையே அதிர வைத்தன. தொடர்ந்து மாமல்லப்புரம், விக்கிரவாண்டி, மேட்டூர், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, விருத்தாச்சலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் தற்கொலை சம்பவங்களும், சில இடங்களில் அதற்கான முயற்சிகளும் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தடுக்க உளவியல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனிடையே நேற்றைய தினம் குருநானக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமீபகாலமாக தமிழகத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை எண்ணிப் பார்த்தபோது எனக்கு உள்ளபடியே மனவேதனையாக இருக்கிறது. மாணவிகளுக்கு மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ எத்தகைய இழிசெயல் நடந்தாலும் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று மாணவர்களுக்கு உடல், மன நலம் சார்ந்த விழிப்புணர்வு வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் இத்தகைய விழிப்புணர்வு வாகனங்களை அவர் தொடங்கி வைத்தார். சுமார் 805 விழிப்புணர்வு வாகனங்கள் தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சென்று மாணவர்களுக்கு உடல், மன நலம் சார்ந்த விழிப்புணர்வை அளிக்கவுள்ளது. இந்த வாகனத்தில் உளவியல் ஆலோசகர், மருத்துவர்கள் இடம்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்