குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் நேற்று உயிரிழந்தனர். அவர்கள் உடல்கள் வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு டி.என்.ஏ. பரிசோதனை மூலம் உயிரிழந்த வீரர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது. அதன்பின் இன்று காலை 10.40 மணியளவில் மருத்துவமனையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம் உடல்கள் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்த பிபின் ராவத் உள்ளிட்ட உயிரிழந்த வீரர்களின் உடல்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார். துக்கத்தை அனுசரிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்பு துண்டு அணிந்த படி ராணுவ அதிகாரிகள் உடலுக்கு வீர வணக்கம் செலுத்தினார். 



 


மேலும் இவர்களின் உடலுக்கு வெலிங்டன் ராணுவ தளத்தில் , முப்படைகளின் தளபதிகள், தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தராஜன், அமைச்சர்கள், அதிகாரிகள் இன்று அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து தனித்தனி ஆம்புலன்ஸ்கள் மூலம் 13 பேரின் உடல்களும் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில், நீலகிரியில் விபத்து நிகழ்ந்த காட்டேரி பகுதியில் இருந்து கருப்புப்பெட்டி உள்ளிட்ட 3 பொருட்களை ராணுவ அதிகாரிகள் மீட்டுள்ளனர். கண்டெடுக்கப்பட்ட கருப்புப்பெட்டியை டெல்லி அல்லது பெங்களூருக்கு கொண்டு சென்று ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் விமான கட்டுப்பாட்டு அறையுடன் விமானியின் பேச்சு பதிவு அடங்கிய கருப்பு பெட்டியை ஆய்வு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர். 

 



 

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தின் தலைநகரான கடலூர் தலைமை தபால் நிலையம் எதிரே உள்ள மாவட்ட ஆட்சியர் தங்கும் முகாம் அலுவலகம் அருகே முன்னாள் ராணுவத்தினர் ஒன்றாக சேர்ந்து அவர்களின் சார்பில் நேற்று ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவர்களின் புகைப்படத்திறக்கு மெழுகுவர்த்தி ஏந்தி, பின்னர் அவரின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் மேலும் உடன் சென்று உயிரிழந்த ராணுவ வீரர்கலுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் அவர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தபட்டது. பின்னர் அவர்கள் கூறுகையில் முப்படை தளபதி பிபின் ராவத் அவர்களின் இறப்பு இந்திய இராணுவத்திற்கும் இந்தியாவிற்கும் மிகப்பெரிய இழப்பு என வேதனை தெரிவித்தனர்.